கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்களினால் கருக்குழந்தைக்கு புற்றுநோய் கூட ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆபத்தான அழகுசாதனங்கள்
இன்றைய நாகரீக உலகத்தில் அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்காத பெண்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நெயில் பாலீஸ் முதல் லிப்ஸ்டிக் வரை எண்ணற்ற பொருட்கள் சந்தையில் குவிந்து கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன. இளம் மங்கைகள் மட்டுமல்லாது, கர்ப்பிணிப் பெண்களும் இன்றைக்கு அழகு சாதனங்களை உபயோகித்து வருகின்றனர்.
அலுவலகத்திற்கு செல்லும் போதும், விருந்து உள்ளிட்டவைகளுக்கு செல்லும் போதும் எண்ணற்ற பொருட்களை உபயோகிக்க நேரிடுகிறது. இது கருக் குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். “தாயின் அத்தியாவசியத் தேவை “ என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதை இந்த ஆய்வு வருத்தத்துடன் சொல்கிறது.
ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால் அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்தது. தாய் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் மூலம் குழந்தைக்கு இந்த தீங்கு ஏற்படுகிறது.
ஹார்மோன் பிரச்சினை
எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இனப்பெருக்க வளர்ச்சி பாதிப்பு
டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.
புற்றுநோய் பாதிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால்தான் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மருதாணி வைத்தால் கூட,அது கருக் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது என்றும், பவுடர் போடவும் கூட தடை விதிக்கின்றனர் கிராமத்து பாட்டிகள்.
No comments:
Post a Comment