Saturday, 16 March 2013

மனிதனையும், கணினியையும் வேறுபடுத்தும் "கேப்ட்சா"

 


இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல்   சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு
அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும்.

இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும்.


பலவகையான கேப்ட்சாக்கள்

கேப்ட்சா எப்படி பாதுகாக்கும்?
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலோ, வங்கிக் கணக்கு அல்லது மின்னஞ்சல் கணக்கில் நுழையும்படியாகவோ மென்பொருள்களை உருவாக்கிட முடியும். அவற்றைக் கொண்டு தானியங்கி முறையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நமது கணக்குகளை நிர்வகிக்கும்படியாக மென்பொருள்களுக்கு கட்டளையிடுவது சாத்தியமாகும்.
இந்த வசதியை இணையத் திருடர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிப் பயன்படுத்தினால் எவரது கணக்கையும் ஹேக் செய்துவிட முடியும். இந்த பாதுகாப்புக் குறைபாட்டைப் போக்க, உருவாக்கப்பட்டதே கேப்ட்சா கோடாகும்.
இது கூகுள் கணக்கில் காட்டப்படும் கேப்ட்சா

ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட கேப்ட்சா எழுத்துக்களை தற்போதுள்ள எழுத்துக்களை படிக்கும் ஓசிஆர் (OCR) ஆப்டிகல் கேரக்டர் ரெககனேசன் (Optical character recognition) மென்பொருள்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடும். எனவேதான் அதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு தழைகீழாக, கோணல் மானலாக,   குறுக்குக் கோட்டுடன், ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி என பல வடிவங்களோடு இன்றைய கேப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் மூலம் கணினியைப் பயன்படுத்துவது மனிதனா அல்லது மென்பொருளா என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

கேப்ட்சா (CAPTCHA) என்ற சொல்லின் முழு விரிவாக்கம்
Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதாகும்.


முக‌‌‌‌‌நூலில் காட்டப்படும் கேப்ட்சா

இந்த முறை அமெரிக்க பல்கலைக்கழகமான கார்னகி மெலனைச் சேர்ந்த பேராசிரியர்கள் லூயிஸ் வேன் ஆன், மேனுவல் பிளம், நிக்கோலஸ் ஜே.ஹாப்பர் மற்றும் ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் லாங்போர்ட் ஆகியோரால் 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது தோன்றும் கேப்ட்சா புரியவில்லை என்றால் கணினியில் உள்ள கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து மவுசிலுள்ள ஸ்குரோல் பட்டனை நகர்த்தி பெரிதுபடுத்திப் பார்க்கலாம். அப்பொழுதும் புரிந்து கொள்ளமுடியாவிட்டால் அந்த எழுத்துக்களுக்கு அருகில் இருக்கும் சுழலும் தோற்றத்தில் இருக்கும் இரு அம்புக்குறிகள் சின்னத்தை கிளிக் செய்து வேறு கேப்ட்சா குறியீட்டைப் பெறலாம்.
சில வகை கேப்ட்சாக்களில் ஒலிப்பெருக்கியின் படம் கொடுக்கப்
பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்வதன் மூலமாக அந்த எழுத்துக்களை ஒலிக்கக் கேட்டும் பூர்த்தி செய்யலாம்.

ரீகேப்ட்சா (Re-Captcha)

கேப்ட்சாவில் ரீகேப்ட்சா (Re Captcha) என்ற ஒன்றும் உள்ளது. இதுவும் கார்னகி மெலன் பல்கலைக்கழகத் தயாரிப்புதான். இதில் என்ன புதுமை என்றால் இதில் கொடுக்கப்படும் எழுத்துக்களுடனான கேப்ட்சா பழைய புத்தகங்களிலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். கொடுக்கப்படும் ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்யும்போது அந்த எழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரே நேரத்தில் பாதுகாப்பும், பழைய புத்தகங்கள் கணினிமயமாக்கும் பணியும் நடைபெறுகிறது.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்கள் வரை கணினி மயமாக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இன்றுள்ள பெரும்பாலான இணையதளங்களில் குறிப்பாக கூகுள், ஃபேஸ்புக், ஹாட்மெயில், யாகூ மற்றும் பிரபல வங்கி இணையதளங்கள், அரசு இணையதளங்கள் என்று அனைத்து விதமான தளங்களிலும் இந்த கேப்ட்சா படப் பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz