உடல் என்பது அற்புதமாக உருவாக்கப்பட்ட பொருளாகும். பல கோடி
நரம்புகள், தசைகள், எலும்புகள், ரத்த நாளங்கள் என பின்னிப் பிணையப்பட்டதே
மனித உடலாகும். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் தமது பணியைச் சிறப்பாக
செய்வதுடன், பிற உறுப்புகளுடன் இணைந்து முழு உடலையும் செயல்படுத்தும்
தன்மை மிகவும் சிறப்பானதாகும்.
ஆனால் இன்று
பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதன் தன் செயல்களை செய்வதில்
குறைபாடு ஏற்பட்டு அதனால் உடலானது பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. கல்லீரல்
தான் மனித உடலில் மிகப் பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது.
இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
கல்லீரல்
வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. கல்லீரல்
செல்களினால் ஆனது. பல ரத்தக் குழாய்கள் சூழ்ந்துள்ள இதனை சுறு சுறுப்பாக
இயங்கும் ஒரு ரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பிடலாம். மாரடைப்பை தடுக்கும் நாம்
உண்ணும் உணவு செரித்து அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு
பாகத்திற்கும் சென்றடைவதற்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.
இந்த
மாற்றங்களே வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. வளர்சிதை
மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு
சத்துள்ள உணவு பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த
பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல் தான். பொதுவாக கொழுப்புச்சத்துள்ள
உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா
உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.
அதில்
முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் படிந்து
அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம்
செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில்
சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல்
இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலுக்கு
தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான
பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய
பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இரும்புச்சத்து வைட்டமின் பி12,
வைட்டமின் ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறது. நோய்த் தொற்றுதலை
எதிர்த்து போர்புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்கு
ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
கொழுப்புச் சத்துக்களைச் செரிக்க வைக்கும் பித்த நீர்:
பித்த
நீர் காரத்தன்மை கொண்டது. கசப்புச்சுவையுடைய இதில் மூன்று வகை பொருட்கள்
உள்ளன. தண்ணீர், பித்த உப்பு, பித்த நிறமிகள். பித்த நிறமிகள் தான்
மலத்திற்கு நிறத்தை தருகின்றன. மலத்தின் நிறம் மாறினாலே உடலில் நோயின்
தாக்கம் இருக்கும். பித்த உப்பு, கொழுப்பு சத்துக்களை செரித்ததும், செரித்த
உணவுச் சத்தை உறிஞ்சி உறுப்புகளுக்கு கொடுப் பதற்கும் உதவுகிறது.
பித்த
உப்பானது கொழுப்பில் கரையும் வைட்ட மின்களான ஓ மற்றும் கால்சியம்
செரித்தலுக்கும் உதவுகிறது. பெருங்குடலைத் தூண்டி சிரமம் இல்லாமல் மலம்
வெளியேறவும், ஒரு முறை சுரந்த பித்த நீர் தன் வேலையைச் செய்து முடித்தவுடன்
மீண்டும் பித்த நீர் சுரக்க கல்லீரல் செல்களைத் தூண்டுவதும் பித்த
உறுப்புகள்தான்.
உணவில் உள்ள மாவுச் சத்துக்கள்,
புரதச் சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு
பித்த நீர் உதவுகிறது. உண்ட உணவானது நேரடியாக அதே நிலையில் சிறுகுடலுக்கு
சென்று பித்த நீரால் செரிக்கப்பட்டு சத்தாக மாற்றி திசுக்களுக்கு
சென்றடைவதற்குள் அவை பல மாறுதல்களைப் பெற்று இறுதியாக குடலுறுஞ்சிகளால்
உறிஞ்சப்படுகிறது.
உதாரணமாக மாவுச்சத்துள்ள உணவை
நாம் சாப்பிடும் போது அது குளுக்கோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுக்கோஸ்
தேவைக்கு அதிகமாக உள்ள போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே
தேவைக்கு அதிகமாக உள்ள குளுக்கோஸை கல்லீரல் கிளைக்கோஸைனாக மாற்றி தன்னுள்
சேமித்து வைத்துக் கொள்கிறது.
அறிகுறிகள்:
உடல்
களைப்பு, பசியின்மை, அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டு
வலி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுசீர் சிவப்பு
மஞ்சள் நிறமாகவும், மலம் நிறம் மாறியும் வெளியாகும். மலச்சிக்கல் அல்லது
பேதி போன்றவை உண்டாகும்.
காமாலை நோயை குணமாக்க:
நீர்முள்ளி
பூ, வேப்பம்பூ, நெருஞ்சில், திரிபலா, சிவதை வேர், சம அளவு எடுத்து நீரில்
இட்டு குடிநீராக காய்ச்சி காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் கல்லீரல்
பாதிப்பினால் உண்டான காமாலை குணமாகும். கீழா நெல்லி-1 கைப்பிடி, சுக்கு-5
கிராம், சீரகம்-5 கிராம், சோம்பு-5 கிராம்.
இவற்றை
எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு
ஒருமுறை குடித்து வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்ட காமாலை நோயின்
தாக்கம் மெல்ல மெல்ல குறையும். கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் மூலிகைகள்
கீழா நெல்லி, வில்வம், அத்தி, வேப்பிலை, நெல்லி, தும்பை, துளசி,
அருகம்புல்.
கல்லீரல் வீக்கம் உருவாக காரணங்கள்:
முறையற்ற
உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் தவறி உண்பது, அளவுக்கு அதிகமாக உணவு
சாப்பிடுவது, மது அருந்துவது, புகையிலை, பான்பராக் போடுவது, புகை
பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது முதலியவற்றால் கல்லீரல்
வீக்கம் அடைகிறது. மேலும் மன அழுத்தம், மனக் கிளர்ச்சி இவைகளாலும் கல்லீரல்
பாதிக்கப்பட்டு வீக்கம் உண்டாகிறது.
தாக்கும் நோய்கள்:
வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் ஏ,பி,சி,டி,இ, என்று பல வகைகள் உள்ளன. இதில் வைரஸ் ஹெப்பாடிட்டீஸ் பி அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
தவிர்க்க வேண்டியவை:
கல்லீரல்
நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை. அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட
உணவுகள், சோடா உப்பு கலந்த உணவுகள், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை
மற்றும் கிழங்கு வகைகள்.மது, புகைப் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
முறையான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். நேரம் தவறாமல் சாப்பிட
வேண்டும்.
உணவுமுறை:
நன்கு
சுத்தமான நீரை அருந்த வேண்டும், தினமும் போதிய அளவு நீர் அருந்துவது
நல்லது. தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம்
இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உப்பு, புளி நீக்க வேண்டும், அதிக அளவு
கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, வாழை, பேரீட்சை, திராட்சை,
மாதுளை, கோதுமை, பார்லி கஞ்சி உட்கொள்ளலாம்.
இளநீர்,
பதநீர், பனை நுங்கு, கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். மேலும்
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப் படுத்தி, கல்லீரலைப் பலப்படுத்த
இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன. கல்லீரல் உடலின் அனைத்து
செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை பாதுகாத்து
ஆரோக்கியமாக வாழ்வோம் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.
No comments:
Post a Comment