Tuesday, 13 August 2013

ரத்த சோகையின் காரணங்களும் அதற்கான தீர்வும்

ரத்த சோகை
 
ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில்ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இந்த ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. 
 
இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்துவிடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
 
ஏற்பட காரணங்கள்
 
ரத்த சோகைக்கான காரணம் ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக்கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை:
 
1.இரத்த சிவப்பணுக்களின் (Red blood cells) தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும். (Dyshaemopoietic anemia)
 
2.வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை (bone marrow) யினாலும் ரத்தச் சோகை உண்டாகும். 
 
3.இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் (aemolytic anemia) இரத்தச் சோகை ஏற்படும். இரத்தம் அதிகம் வெளியேறுவதால் (Haemorrhagic anemia)
 
4. இரத்தம் மாசுபடுதல்
5. வயிற்றில் அல்சர்
6. வயிற்றில் கட்டி
7 வயிற்றில் வீக்கம்
8. வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்றுநோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும்.
9. வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.  
 
10.குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு.போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.
 
மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.
 
இரத்தச் சோகையின் அறிகுறிகள்
1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படல்.
3. முகத்தில் வீக்கம் உண்டாதல், நகங்களில் குழி விழுதல்
4. கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்
5.உடல் நலம்சரியில்லாதது போன்ற உணர்வு
6. மூச்சுவிடுவதில் சிரமம்.
7. இதயம் வேகமாகத்துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது.
8.குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை
 
இதெல்லாம் போக, தலைவலி, நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரம்மாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம் உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.
 
சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.அதற்குப் பிறகு சிதைந்துவிடும். ஆனால், சில நோய்களின் காரணமாக, ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்துவிடும். அப்படி நடக்கும்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ்என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம். 
 
ரத்தசோகை இருப்பது சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்த்த்தில் 11 -15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும். ஒருவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாக அர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப் போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். 
 
இரத்த சோகையால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்:
 
பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
 
சோர்வு: ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போக்க்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாகஒருவர் தீவிர மன அழுத்த நோயாளிகும் வாய்ப்பும் இருக்கிறது.
 
நோய்க்குள்ளாகும் வாய்ப்பு: ஆரோக்கியமானவர்களைவிட, ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக் குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை "பம்ப்" செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்க்க்கூடும். ரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில்உடலில் இருப்பது அவசியம்.
 
இரத்த சோகைக்கான மருத்துவம்
 
இரும்புக்குறைபாடு - உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.
 
உணவுப் பழக்கம்: நோயாளி இரும்புச் சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.
 
வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.
 
இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும்,
 
திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச்சோகை நீங்கும்.
 
மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை நீங்கும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz