Thursday 9 May 2013

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்


வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

மீல்மேக்கர் டிக்கிஸ்
தேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல்,  காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ -  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி
தேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

கிரீன்  ரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) – அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,
டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

முந்திரி பொடி
தேவையானவை: முந்திரி – 20, பாதாம் – 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.

பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

மூங்தால் பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறு கட்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஸ்பைஸி ரவா கிச்சடி
தேவையானவை: வறுத்த ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

ஆலு  பாலக் கட்லெட்
தேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

சோயா  ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் – 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு – ஒன்றரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6,  பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.

வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz