காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகாரத்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு.இது சிலருக்கு தினசரி அனுபவமாகவும் இருக்கலாம்.இன்னும் சில நேரங்களிலோ முக்கியமான பொருளை வைத்த இடம் தெரியாமல் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருப்போம்.
இப்படி இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுவது தத்துவ நோக்கில் இல்லாவிட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்படுவது தான்.
இது போன்ற நேரங்களில் தேடும் பொருளை எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்வதற்காக மூளையை கசக்கி கொள்ளவும் நேரலாம்.அவசரத்தில் இருக்கும் போது இந்த மறதி பெரும் சோதனையாக அமையலாம்.
எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் எப்போதாவது எற்பட்டிருக்கலாம் என்பதால் இதனை அதிகம் விவரிக்க தேவையில்லை.விஷயம் என்னவென்றால் இந்த தேடலுக்கு தீர்வாக அமையக்கூடிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
தி ஃபவுண்ட் திஸ் என்னும் அந்த தளம் மறந்து வைத்த பொருளை தேடும் போது கைகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.உடனே பொருட்களை தேடும் போது இந்த தளம் துப்பறியும் புலிகளை அனுப்பி வைத்து உதவும் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்.
இந்த தளம் செய்வதெல்லாம் மிகவும் எளிமையானது.நீங்கள் மறந்து வைக்ககூடிய பொருட்களை பட்டியலிட்டு கொள்வதற்கான இடமாக மட்டுமே இந்த தளம் விளங்குகிறது.அதாவது உங்கள் வசம் உள்ள முக்கிய பொருட்கள் மற்றும் மறந்துவிடக்கூடிய பொருட்களை இதில் பட்டியலிட்டு அவற்றுடன் எங்கோ வைக்கிறோம் என்ற குறிப்பை எழுதி வைக்கலாம்.பின்னர் எப்பொதாவது அந்த பொருளை தேட நேரும் போது எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்ள திண்டாட வேண்டியதில்லை.
நேராக இந்த தளத்திற்கு வந்து பார்த்தால் அந்த பொருளுக்கான குறிப்பில் வைத்த இடம் எது என்பதை தெரிந்து கொண்டுவிடலாம்.அவ்வளவு தான்.
ஆனால் ஒன்று ஒரே இடத்தில் பொருட்களை வைக்கும் பழக்கம் இருந்தால் தான் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.இல்லை பொருட்களின் இடத்தை மாற்றும் போது அதனையும் குறிப்பிட வேண்டும்.
இருப்பினும் அடிக்கடி பயன்படுத்த தேவையில்லாத முக்கியமான பொருட்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டுவர இந்த தளம் உதவியாக இருக்கும்.
எல்லா பொருட்களையும் இண்டெநெட்டுடன் இணைத்து வைக்கும் காலம் இது.அந்த வகையில் மறந்து வைத்த பொருட்களை தேடும் வகையிலான இந்த தளம் தேவையானது தான்.
இணையதள முகவரி;http://www.thefoundthis.com/
No comments:
Post a Comment