Tuesday 23 April 2013

ஆடு வளர்த்தால் தொழிலதிபர் ஆகலாம்..!

இந்தப் பதிவு வெள்ளாடு வளர்த்தே பெரும் தொழிலதிபராய் மாறியவரைப் பற்றிய ஒரு சுயமுன்னேற்ற தொழில் முறைச் சார்ந்த  பதிவு.

கிராமப்புற மக்களின் வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இன்பமான வாழ்க்கை. விவசாயம் செய்து மரம், செடி, கொடி பயிர்களோடு நாள்தோறும் வாஞ்சையோடு பேசி மகிழ்பவர்கள் கிராமப்புற மக்கள். அதே போல பறவை, விலங்குகள் ஒவ்வொன்றோடும் நட்பு கொள்பவர்கள் அவர்கள்.

விவசாயம் எப்படி அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டதோ அதே போல கால்நடை வளர்ப்பு என்பதும் அவர்களின் வாழ்வு முறையில் ஓர் அங்கமாகி விட்டது. எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசம் சார்ந்த முறையில் பழக்கப்பட்ட கால்நடை வளர்ப்பானது இன்று அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வழியைக் காண்பிக்கும் தொழிலாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது.

இந்த வகையில் ஆர்.மனோகர் என்பவர் வெள்ளாடு வளர்ப்பின் மூலம் ஒரு பெரிய தொழிலதிபராகவே உயர்ந்திருக்கிறார். அவர் தன் வெள்ளாடு வளர்ப்பு அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


நான் 1994ல் ஒரு கோழிப் பண்ணை தொடங்கினேன். அந்த சமயத்தில் கோழிகளை பலவித நோய்கள் தாக்கியதால் அதிகமான நட்டத்தை அடைந்தேன். இதனால் ஆட்டு பண்ணை வைக்கலாமே என யோசித்தேன். ஆடுகள் வெட்டிய தலையை மீட்கும் என்பார்களே. அதன்படி 1995ம் ஆண்டில் 3 தலைச்சேரி ஆடுகளை 1 குட்டி ரூ.1500 என கேரளாவிலிருந்து வாங்கி வந்தேன். 1996ம் ஆண்டில் மாட்டுப் பண்ணையும் வைத்துப் பார்க்கலாமென 40 மாடுகளை வாங்கி வந்தேன். இந்த மாடுகளின் மூலம் சுமாரான லாபம் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.

எனவே ஆட்டுப் பண்ணை தான் நமக்குத் தோதான தொழில் என்று முடிவெடுத்து ஆட்டுப் பண்ணையை விரிவுபடுத்த விரும்பினேன். மாடுகளைக் குறைத்து ஆடுகளைப் பெருக்கினேன். ஒரே ஆண்டில் 100 தலைச்சேரி ஆடுகளை வாங்கி வளர்த்தேன். இந்த 100 ஆடுகளிலிருந்து 400 ஆடுகள் உற்பத்தி ஆயின.

இந்த தலைச்சேரி ரகமானது மாதத்திற்கு 4 கிலோ அளவிற்குத் தான் வளரும். இதைவிட அதிக எடையுடன் வளரும் ரகம் என்னவென்று கேட்டறிந்து போயர் ரக ஆடுகளை கேரளாவிலிருந்து ஒரு ஜோடி வாங்கி வந்தேன். ஒரு ஜோடி 60,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. போயர் ரக கிடாவோடு, தலைச்சேரி பெட்டை ஆட்டை இணைத்து கலப்பினக் குட்டிகளை உற்பத்தி செய்தோம்.

இந்தக்குட்டிகள் மாதத்திற்கு 6 கிலோ எடை வளர்ச்சி அடையும் தன்மை உடையவை. தற்போது என்னிடம் மொத்தம் 600 ஆடுகள் இருக்கின்றன. இதில் போயர் 100, சுரோகி 10, தலைச்சேரி 400. தலைச்சேரி ஆடுகளை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் வந்து எங்களிடம் வாங்கிச் செல்கிறார்கள். தலைச்சேரி ஆடுகளை உயிர் எடை ஒரு கிலோ ரூ.200 எனக் கொடுக்கிறோம். 40 கிலோ எடை கொண்ட போயர் இன ஆடுகளை ரூ.3000க்கு கொடுக்கிறோம். 20லிருந்து 81 கிலோ வரை எடை கொண்ட சுரோகி இன ஆடுகளை ரூ.5000லிருந்து 20,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம்.

ஒரு தலைச்சேரி ஆட்டிலிருந்து ஆண்டுக்கு 4 குட்டிகள் கிடைக்கும். 25 கிலோ எடையுள்ள இந்தக் குட்டிகளை இறைச்சி விற்பனைக்காக கிலோ ரூ.125 எனக் கொடுத்து எடுத்துச் செல்கிறார்கள். இதன் மூலம் 1 தலைச்சேரி ஆடு ஆண்டுக்கு 12,500 ரூபாயை வருமானமாகக் கொடுக்கிறது.

ஒரு ஆட்டுக்குப் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 4000 ஆகிறது. மீதி 8500 லாபமாகக் கிடைக்கிறது. 50 ஆடுகளுக்கு பசுந்தீவனமிட 1 ஏக்கர் நிலம் தேவைப்படும். நோய் ஏதேனும் தென்பட்டால் நோயைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.

ஆடு வளர்ப்பில் 60 நாட்களுக்கொரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மிகவும் முதன்மையானது. வாய் வழியே பூச்சி மருந்து கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கம் செய்யவில்லை என்றால் ஆடுகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்கள் பெருகும்.

ஆடுகளுக்குக் கொட்டகை அமைக்கும் போது சுகாதாரமான, நல்ல காற்றோட்டமான முறையில் அமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz