Monday, 18 March 2013

சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.
ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்.
ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம்.
இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம்.
அடிப்பையில் இந்த தளம் தனியாக இருப்பதாக உணர்பவர்கள் தங்களை போலவே உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வலைப்பின்னல் சேவை எனலாம்.
இந்த தளத்தில் பிரச்சனையை பகிர்ந்து கொள்பவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பிரச்ச்னையை மட்டும் வெளிப்படுத்தலாம். எனவே நண்பர்களிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்? ஒன்று மனதில் உள்ளதை இருக்கி வைத்தது போல இருக்கும். அதைவிட முக்கியமாக அதே பிரச்சனையில் அல்லது அதே போன்ற சூழலில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பது தான் இந்த சேவையின் தனிச்சிறப்பு.
அதாவது இந்த தளத்தில் ஒருவர் பிரச்சனையை பகிர்ந்து கொண்ட பின் அதே போன்ற பிரச்சனையை எதிர் கொண்டவரை தொடர்பு கொண்டு பேச முடியும்.
உதாரணத்திற்கு ஒருவர் மன முறிவின் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவரைப்போலவே மனமுறிவுக்கு ஆளானவர் அல்லது அந்த சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்தவரோடு தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்று சொல்வதை போல ஒரே சூழலில் இருப்பவர்கள் பேசும் போது மற்றவர் நிலையை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அல்லவா? மேலும் அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தையையும் கூற முடியும் அல்லவா? இந்த அற்புதத்தை தான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.
பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு தாங்கள் மட்டுமே அந்த நிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும் அல்லவா? அந்த உணர்வில் இருந்து விடுபட முதலில் உதவுகிறது இந்த தளம்.
தீராத கடன் தொல்லையோ, தலைமுடி உதிர்வதோ, மனமுறிவோ, தன்னம்பிக்கை குறைவோ, உடல் பருமனோ எந்த பிரச்சனை என்றாலும் சரி இந்த தளத்தில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். உடனே இந்த தளம் ஏற்கனவே சோகங்களை பகிர்ந்து கொண்டவர்களில் அதே நிலையில் இருப்பவர்களை கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்துகிறது.
அதன் பிறகு அவருடன் கருத்து பரிமாற்றத்தில் ஈட்டுபட்டு ஆறுதல் அடையலாம். கேள்விகள் கேட்டு ஆலோசனையும் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேல் ஒருவித நட்புணர்வு ஏற்பட்டு நமக்கென துணை இருக்கும் தெம்பை பெறலாம்.
ஒரே போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் என்றாலும் ஒவ்வொருவரது கோணமும் அணுகுமுறையும் வேறுவேறாக இருக்கும். அவற்றையும் அலசிப்பார்த்து எல்லாவிதங்களிலும் ஒத்து போகிறவர்களை இணைத்து வைக்கிறது இந்த தளம்.
பகிர்வதற்கு முன்பே இந்த தளத்தில் தங்கள் பிரச்சனையை குறிப்பிட்டு அதே பிர்ச்சனையால் பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்பு கொள்ளலாம். யாரிடமாவது சொல்லி புலம்ப மாட்டோமா என நினைத்து கொன்டிருப்பவர்களுக்கு இந்த தளம் உற்ற நண்பனாக வழிகாட்டும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz