எத்தனையோ ஞானிகள், மகான்கள் ஞாபக சக்தியின் உச்சமாக
விளங்கியிருக்கிறார்கள்.. அதுபோல சாதாரண மக்களும் ஞாபக சக்தியை
அதிகரிக்கலாம்.. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீங்களும் ஒரு
ஞானிதான் என்பதை விளக்கும் கட்டுரை இது..
பாஸ்டன்
நகரத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு அன்றைய தினம் மிகப் புகழ்
பெற்ற விஞ்ஞானி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார்.
மாணவிகளும், ஆசிரியர்களும், ஏன் பள்ளியின் முதல்வரும்கூட அவருடைய உரையை
கேட்பதற்காக மிக ஆவலாக அவரின் வருகையை எதிர் பார்த்திருந்தனர்.
நேரம் கடந்துகொண்டே இருந்தது.
ஆனால், விஞ்ஞானி வருவதற்கான எந்தத் தடயமும் இல்லை. நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்த பள்ளி நிர்வாகிகள் கைகளை பிசைந்தபடி மிகவும் பதட்டமாக காணப்பட்டனர்.
என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தனர். நேரிலேயே போய் அவரை கையோடு அழைத்து
வந்துவிடலாம் என முடிவு செய்து புறப்பட்டு, அவருடைய வீட்டிற்குச் சென்றனர்.
அங்கோ அவர்களுக்கு அதிர்ச்சிதான்
காத்திருந்தது. விஞ்ஞானி வெளியில் எங்கோ சென்று விட்டாராம். அங்கே இங்கே
என்று தேடி கடைசியில் அவருடைய நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார் என்ற
தகவலையறிந்து நண்பர் வீட்டை நோக்கி ஓடினர்.
அங்கே மொட்டை மாடியில் ஏதோ
ஆராய்ச்சிப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் விஞ்ஞானி. அழுக்கு
உடையோடும், கலைந்த தலையோடும் இருந்தவரிடம் சென்ற பள்ளி நிர்வாகிகள்,
''அய்யா, நீங்கள் இன்றைக்கு எங்கள் பள்ளியின் சிறப்பு விருந்தினராக வந்து
உரையாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று கூறினர்.
''அடடா...! மறந்தே போய் விட்டேனே! சரி, சரி, புறப்படுங்கள் போகலாம்''என்று அவர்களுட னேயே புறப்பட்டு வந்துவிட்டார் அந்த விஞ்ஞானி.
ஆசிரியர்களும்
மாணவிகளும், தனக்காக காத்திருப்பதைக் கண்ட விஞ்ஞானிக்கு உற்சாகம்
தொற்றிக்கொள்ள, மின்னாற்றல் பற்றியும், மின்சாரப் பொருட்களைப் பற்றியும்
நயாகரா அருவி போல், கேட்போர் வியக்கும் வண்ணம் சொற்பொழிவாற்றி முடித்தார்.
''கொஞ்சம் நல்ல உடையாக அணிந்து,
தலை வாரிக்கொண்டு வந்திருக்கக்கூடாதா?'' என்று ஒருவர் கேட்டபோது, ''நான்
இங்கு வரவேண்டும் என்று எனக்கு நினைவுபடுத்தியவர்கள் இதை நினைவுபடுத்தவே
இல்லையே'' என்று சிரித்த படியே பதிலளித்த அந்த விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா
எடிசன்.
எடிசனுக்கு மற்ற விஷயங்கள் நினைவில்லாமல் போவதற்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன.
ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு மற்றவற்றை மறந்து போகுமளவிற்கு காரணம் எதுவும் இல்லாமலே நமக்கு மறதி ஏற்படுகிறதே ஏன்?
நம்முடைய செயல்கள் வேகமாகவும்,
விவேக மாகவும் நடைபெறுவதற்கு நம் நினைவாற்றல் சிறப்பாக இயங்கிக்
கொண்டிருப்பது அவசியமல்லவா. இன்றைக்கு நம்மில் பலருக்கும் தலையாய
பிரச்னையாய் இருப்பது ஞாபக மறதி தானே!
தலையசைப்போ,
தலையாட்டுதலோ,
தலை கவிழ்தலோ,
தலை நிமிர்தலோ,
அனைத்தும்
நம் தலைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் மூளையிலும் அதன் சிக்கலான கட்டுப்
பாட்டில் இருக்கும் நிகழ்வுப்பதிவுகளிலும்தான் இருக்கின்றன.
ஒரு நாளில் ஓரிருமுறையாவது நாம்
சொல்கின்ற அல்லது கேட்க நேருகின்ற வார்த்தைகள், ''ஞாபகமே இல்லையே'',
''அய்யோ மறந்துவிட்டேனே'' என்பதைதான். ஞாபகமறதி காரணமாய் மிக முக்கியமான
வேலைகள்கூட நின்று விடுகின்றன.
நமக்கு ஆகவேண்டிய வேலை தொடர்பாக
மற்றவர்கள் ஞாபகமின்மையை காரணம் காட்டினால் நமக்கு அவர்கள்மீது கோபம்
வருகிறது. எரிச்சல் ஏற்படுகின்றது. வேலையின் தன்மையைப் பொறுத்து ஏற்படும்
இழப்புகளைப் பற்றி கணக்குப்போட்டு சம்பந்தப்பட்டவரிடம் சண்டைகூட போட
நேரிடுகிறது.
அதே நேரத்தில் பிறர் வேலை
தொடர்பாகவோ அல்லது நம்முடைய வேலை சார்ந்தோ நாமே செய்ய வேண்டிய பணிகளை நாம்
மறந்துவிடும்போது, அதேயளவிற்கு கோபத்தை சந்திப்பதற்கு நாம் தயாராய்
இருப்பதில்லை. பிறருடைய ஞாபகமறதி காரணமாய் இழப்பு நமக்கு ஏற்படும்போது நாம்
பாதிக்கப்படுவதை எந்த அளவிற்கு உணர்கிறோமோ, அதேயளவு நம்மால் ஏற்படும்
போதும் உணரவேண்டும்தானே!
சரி.
இந்த ஞாபகமறதி தொல்லையிலிருந்து விடுபடுவது எவ்வாறு?
நினைவாற்றல் என்பது என்ன?
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள் யாவை?
நினைவாற்றலை வளர்க்கும் ஆரோக்கியமான பழக்கங்கள் எவை?
வயது காரணமாய் நினைவாற்றல் குறைவதை தடுப்பதெப்படி? என்பதைப் பார்ப்போம்.
ஞாபகம் அல்லது நினைவாற்றல் என்பது:
ஒவ்வொரு நொடியும் நம் முன்
நிகழ்கின்ற, நாம் பார்க்கின்ற காட்சிகள், நாம் கேட்கின்ற செய்திகள்,
சொற்கள், சத்தங்கள், இசை, நாம் உணரும் வாசம், அனுபவிக்கும் இன்பம்,
துன்பம், பயம், வலி, அதிர்ச்சி, அழுகை, சிரிப்பு, சுவை என ஐம்புலன்களாலும்
நாம் உணரும் ஒவ்வொன் றையும் நம் மூளை அந்தந்த நிலையில் நாம் என்ன
உணர்ந்தோமோ, அவற்றையும் அப்போது நம்முடன் இருந்தவர்கள், அவர்களின்
எதிர்வினை என அனைத்தையும் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.
இப்படி
பதிவானவை தொடர்பாக மீண்டும் அதே போன்ற சூழல்கள் ஏற்படும்போது நமக்கு
இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவங்கள் தானாகவே நினைவுக்கு வருவதும், நம்முடைய
அன்றாடப் பணிகள் மற்றும் எதிர்காலப் பணிகள் தொடர்பாக நாம் திட்டமிட்டு
வைத்துள்ள செயல்கள் சரியான நேரத்தில் நினைவுக்கு வருவதையும்தான்,
=நினைவாற்றல்+ என்கிறோம்.
தேவைப்படும் நேரத்தில்
தேவைப்படும் செய்திகள் இயல்பாக நினைவுக்கு வந்துவிட்டால் நம் மூளை
சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நம்
நினைவாற்றல் சிறப்பாக உள்ளதென்பதையும் தெரிந்து கொள்ளலாம். மாறாக, ஏற்கனவே
உணர்ந்ததும், திட்டமிட்டு வைத்ததும் நினைவுக்கு வராமல் உள்ளதென்றால்,
நம்முடைய மூளைக்கு கடுமையான பணிகளை நாம் ஏற்படுத்துகின்றோம் (அல்லது
சோம்பல்தன்மையிலேயே நாம் இருக்கின்றோம்) என்பதையும் உணரவேண்டும்.
ஞாபகங்கள் என்பது,
ஒவ்வொன்றிற்கும் நாம் தரும் முக்கியத்துவத்தைப்பொறுத்து மிகக் குறுகிய
காலத்திற்கு நினைவில் இருப்பவை, நீண்ட காலம் நினைவில் இருப்பவை என மூளை
வகைப் படுத்தி வைத்துக்கொள்கிறது.
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள்:
1. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்பது உடல்
வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை சுறுசுறுப்பாக இயங்க
வைக்கவும், நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக அவசியமாகும். எனவே
தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களை யாவது உடற்பயிற்சிக்கு
கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து
கொள்ளாதபோது நம்மால் அதனை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது. மிகச் சிறிய
விஷயம் ஒன்றை பதிவு செய்ய நம்முடைய மூளை குறைந்தது எட்டு நொடிகளை எடுத்துக்
கொள்கிறது. எனவே, வலிந்து நினைவில் செய்திகளை பதிக்கும்போது அமைதியான
இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
2. தையல்காரர் அணுகுமுறை:
மேலோட்டமாய்
தகவலைக் கேட்டுக் கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து வைப்பது என
நுனிப்புல் மேய்வது போல் இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு அளவுகளை சரியாகக்
குறித்துக் கொள்கிறாரோ அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து கொள்வது
என்றைக்குமே மறந்துபோகாது.
3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:
கண்டிப்பாக
நினைவில் வைக்கவேண்டிய விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல் நல்லது.
படித்தறியும்போதுகூட பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு
(முடிந்தால் சத்தமாக) படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல்
வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது. கேட்பதன் மூலமாக அறிந்து
கொள்ளும்போது தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம், தன்மையோடு பதிவுசெய்து
கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி வைத்தல்:
புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு செய்யலாம்.
5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:
எழுதிவைக்கும் தகவல்களோடு
அதற்குரிய படங்களையும் (கோட்டுப் படம் போல்) சின்னச் சின்னதாய்
பக்கத்திலேயே வரைந்துவைத்து எழுதிக் கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும்
போது தன் கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு தகவலாகவும் மனிதன்
பதிவு செய்துள்ளான். இது இன்றைக்கும் சிறந்த முறையாகும். நினைவாற்றலை
வளர்க்கும் ஆரோக்கியமான பழக்கங்களையும் வயது காரணமாய் ஏற்படும் மறதியை
தடுக்கும் முறைகளையும் பேச அடுத்த இதழில் சந்திப்போம்.
No comments:
Post a Comment