Friday 12 April 2013

வாருங்கள்... வழி காட்டுகிறோம்! --- வேலை வாய்ப்புகள்,


 ''திருச்சியில், ஹால்மார்க் முத்திரையுடன் 9 காரட் தங்கம் ஒரு கிராம் 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 22 காரட் தங்கம் 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 9 காரட் தங்கம் என்றால் என்ன? அதை வாங்குவது நல்லதா? மறுபடியும் விற்பனை செய்ய முடியுமா? இதை வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா?''

- ஏ.ராஜேஸ்வரி சின்ஹா, திருச்சி
''சொக்கத் தங்கம் என்பது 24 காரட். இதில் 99.9 சதவிகிதம் தங்கமாக இருக்கும். சொக்கத் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. செம்பு (காப்பர்) கலந்து செய்தால்தான் நகை உறுதிபெறும். சாதாரணமாக 8 முதல் 9 சதவிகிதம் செம்பை கலந்து செய்வார்கள். இப்படி தயாராகும் நகைகள் 22 காரட். இதற்கும் கீழே... 18, 14, 9 ஆகிய காரட்களிலும் நகைகள் கிடைக்கும். எந்த அளவுக்கு செம்பு சேர்க்கப்படுகிறதோ... அதை வைத்து தங்க நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
10 கிராம் செம்பு விலை 5 ரூபாய் மட்டுமே. செம்பை கலந்து நகை செய்யும்போது, தங்கத்தின் விலை குறையும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக செம்பு சேர்த்து, 22 காரட் தங்கம் என்று கூறி விற்பனை செய்வது தாராளமாக நடக்கிறது. எனவே, வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருளையே, தரம் பார்த்து குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கும் நாம், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் தங்க நகைகளின் தரம் அறியாமல், விலை அதிகம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிடக் கூடாது.
இந்தியாவில் இருக்கும் தரக்கட்டுப்பாடு மையம் (Bureau of Indian Standards),  தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும் என தர நிர்ணய முத்திரையை நகையில் பதித்து விற்பனை செய்வதற்கு உதவுகின்றது. 'ஹால்மார்க் பி.ஐ.எஸ்-916' (Hallmark BIS-916) தங்க நகைதான் உண்மையான 22 காரட் தங்க நகை. இதில் 91.6% தங்கம் இருக்கும். ஒரு கிராமுக்கு குறைவான எடை உடைய நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை தேவையில்லை. அதனால் மூக்குத்தி, சிறிய தோடு முதலியவற்றை குறைந்த காரட் தங்கத்திலேயே தயாரித்து, 22 காரட் விலையில் விற்பனை செய்வதும் நடக்கிறது! இதில், விலைகுறைந்த கற்களை வேறு பதித்து விற்பதால், நகையில் உள்ள கற்களுக்கும் தங்கத்தின் விலையையே கொடுத்தாக வேண்டியுள்ளது. இதுவும் வாங்குபவர்களுக்கு நஷ்டத்தையே தரும்!
தோடு, மூக்குத்தி போன்றவற்றில் உள்ள திருகாணி 22 காரட் தங்கம் அல்ல. தங்கத்தில் அந்தப் பகுதியை செய்ய முடியாது. தங்க நகை வியாபாரிகளில் பலரும் செய்கூலி, சேதாரம் எனக் கூறி 10% முதல் 25% வரை விலையை கூட்டி விற்பார்கள்.
18 காரட், 14 காரட், 9 காரட் தங்க நகைகளும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். இதற்கும் தர நிர்ணய முத்திரை உண்டு. 9 காரட் தங்க நகை என்பது 'ஹால்மார்க் பி.ஐ.டி.எஸ்-375' (Hallmark BIS-375). அதில் 37.5% தங்கம் இருக்க வேண்டும். அதனால் 38% டு 40% தங்கம்தான் அந்த நகையில் இருக்கும். அதனால், சொக்கத் தங்க விலையில் அல்லாமல், கிராம் 1,600 ரூபாய்க்கு தர முடியும். இதை மறுவிற்பனை செய்தால்... செய்கூலி, சேதாரம் போக, அந்த நகையில் உள்ள தங்கத்தின் அடிப்படையில் மறு விற்பனைக்கு ஏற்றுக்கொண்டு பணம் தருவார்கள்.
9 காரட் நகைகள் குறைந்த விலையில், அதாவது அதன் உண்மையான மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டால் வாங்கலாம். 9 காரட் நகைகள் உறுதியானவை. இதில் தகடுகள் நன்றாக வரும். எனவே, எடை குறைவான (Light Weight) நகைகள் செய்யலாம்.
தாங்கள் 9 காரட் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்தால், 'ஹால்மார்க்' முத்திரையுடன் கூடிய நகைகளை வாங்கி விற்பனை செய்யுங்கள். முக்கியமான விஷயம்... '9 காரட் நகை' எனக் கூறி, அதற்குரிய விலையிலேயே விற்பனை செய்யுங்கள். தங்கம் எத்தனை காரட் என்பதை அறிய உதவும் காரட் மீட்டரையும் கடையில் பயன்படுத்துங்கள். உங்களின் நேர்மைக்குப் பரிசாக லாபம் கொட்டட்டும்!''
''சேலை வியாபாரத்துக்கு லோன் கிடைக்குமா?''
''கடந்த ஒரு வருடத்துக்கு முன் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... 10 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு... நைட்டி, சேலைகள் போன்றவற்றை மதுரையில் மொத்த விற்பனைக் கடையில் வாங்கி விற்றேன். இதில் சிலருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்தும், சிலருக்கு மாதாந்திர தவணையிலும் கொடுத்துதான் கொள்முதல் செய்தேன். ஆனால், திட்டமிடல் இல்லாததால், தொடர்ந்து வியாபாரத்தை நடத்த முடியவில்லை. மீண்டும் இத்தொழிலை முழுமையாக நடத்தவும், அதில் வெற்றி பெறவும் எனக்குள் உள்ள சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, விடையைப் பெற ஆர்வமாக இருக்கிறேன். உதவுவீர்களா?
1. வீட்டிலே வைத்து இந்த வியாபாரம் செய்வதற்கு குறைந்தபட்ச முதலீடு என்ன?
2. திருவிழாக் காலங்களில் மட்டும் அல்லாமல் வருடம்தோறும் இந்த வியாபாரம் நடப்பதற்கு வழிமுறை?
3. குறைந்த செலவில் நல்ல தரமான துணிகளை எங்கு வாங்கலாம்?
4. இந்தத் தொழிலில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து விற்கலாம்?
5. நான் 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.
இந்த சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா? இதற்கு வங்கியிடம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் எவை? அல்லது மாவட்ட தொழில் மையத்திடம் விண்ணப்பிக்கலாமா?''
- எம்.ஆண்டாள், மதுரை
''வாசகி கேட்டுள்ள கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டுமானால், ஒருநாள் தனி வகுப்பு எடுக்க வேண்டும். இருந்தாலும் சில முக்கியமான தகவல்களைத் தருகிறேன்.
முதலீடு பற்றி கேட்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு விதவைத் தாய், 400 ரூபாய் முதலீட்டுடன் வீட்டில் இருந்தபடியே இந்த ஜவுளி விற்பனை செய்து, தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து இன்று ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இந்தத் தொழிலுக்கு ஆரம்பத்திலேயே அதிக முதலீடு தேவையில்லை என்பதற்காகச் சொல்கிறேன். உங்களுக்காக அவர் பெற்ற வெற்றியின் சில டிப்ஸ்கள்...
 உங்கள் சரக்குகளை மொத்த வியாபாரியையும் தாண்டி, உற்பத்தியாளரை அணுகி வாங்க வேண்டும்.
 சேலை, நைட்டி எல்லோருக்கும் விலை தெரியும். இத்துடன் பெண்கள் வெளியில் சென்று வாங்கத் தயங்கும் பெண்கள் உள்ளாடைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.
 நைட்டி, பிரா போன்றவற்றை ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள தளவாய்புரம் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்பத்தி செய்கிறார்கள். விசாரித்து சரியானவரை அணுகி வாங்கவும். நைட்டி துணி ராஜஸ்தான் பலோத்ராவில் இருந்து வாங்கவும்.
 சேலை, சுடிதார் போன்றவை குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து வாங்கலாம். தரம் உயர்வாகவும் விலை குறைவாகவும் இருக்க வேண்டும்.
 பொருள் வாங்கும்போது கிழிந்திருந்தாலோ, சரியாக விலை போடவில்லை என்றாலோ... திரும்ப பெற்றுக் கொண்டு புதுசரக்கு தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதனால் உங்களிடம் பழைய சரக்கு எப்போதும் இருக்காது.
 வாடிக்கையாளர்களிடம் பொறுமை அவசியம். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அவற்றை உங்கள் கொள்முதல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
 வாங்கும் விலை 100 ரூபாய் என்றால், உங்களுடைய முதலீடு, உழைப்பு, விற்பனைக்கு இருக்கும் இடைவெளியில் உங்கள் முதலீட்டுக்கான வட்டி என்று பலவற்றையும் கணக்கிட்டு, விற்பனை விலை 200 என்று வைத்து விற்பனை செய்யவும். இதுவே, கடைகளாக இருந்தால், விளம்பரம், வேலை ஆட்களுக்கான கூலி, கடை வாடகை என்று அனைத்தையும் சேர்த்து 300 ரூபாய்க்கும் மேல் விலை வைப்பார்கள். எனவே, நீங்கள் அதைவிட 100 ரூபாய் குறைவாகத்தான் தருகிறீர்கள் என்பதை, வாங்குபவர்களுக்குப் புரியவைத்து விற்பனை செய்தால், உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, பிஸினஸுக்கும் கைகொடுக்கும். நைட்டி, சேலை என்று அதிக அளவில் விற்பனையாகும் துணி வகைகளாக இருந்தால், 150 விலைக்கே விற்பனை செய்யலாம். கடனுக்கு விற்பனை செய்யும்போது ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். அசல் தொகையான 100 ரூபாயை முதலில் பெற்றுக்கொண்டு, மீதி 50 ரூபாயை தவணையில் வாங்கலாம். எக்காரணம் கொண்டும் அசலை இழந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது முக்கியம்!
 வாடிக்கையாளர்களிடம்... 'சரக்கு சூரத், மும்பையில் இருந்து வந்தது' என்பதைக் கூற வேண்டும்.
 எக்காரணம் கொண்டும் துணியை உபயோகித்துவிட்டால், மாற்றித் தராதீர்கள்.
 உறவினராக இருந்தாலும் பணம் வாங்காமல் கொடுக்காதீர்கள்.
ஒரு வருடமாவது அந்தத் தொழில் உங்கள் பங்குக்கு பணம் எடுக்காமல் இருங்கள். உங்களுக்கு லாபம் பெருகும். வியாபாரம் பெருகும்.
நீங்கள் வியாபாரம் செய்ய, 'யு.ஒய்.இ.ஜி.பி' (UYEGP) திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். 15% மானியமும் உண்டு. உடனடியாக மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும்.''


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz