Saturday 19 October 2013

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

ன்புள்ள தோழிகளுக்கு,
work from home
இந்தப் பகுதியின் தொடக்கமாக, பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். பின்னர் வேலை தேடுவது, நேர்முகத் தேர்வு, இப்படி பல விஷயங்கள் பேச ஆசை.
அறுசுவை அரங்கம் உலகளாவியது, எனினும் நான் இந்தியாவில், தமிழ் நாட்டில் இருப்பதால் இங்கு உள்ள சூழ்நிலையை வைத்து முதலில் எழுதுகிறேன். வீட்டில் இருந்தபடியே என்று ஆரம்பித்ததுமே, ஊறுகாய் போடுவது, தைப்பது, காட்டரிங் என்று ஆரம்பிப்பேனோ என்று பயப்பட வேண்டாம். உண்மையில் இவை யாவுமே விரிவாகப் பேச வேண்டிய விஷயங்கள்தான். இவற்றைப் பின்னால் பார்க்கலாம்.
மருத்துவர், பொறியாளர், கணிணிப் பொறியாளர், ஆசிரியர் என்று “காரியர் உமன்” ஆகவே ஃபோகஸ் செய்து, படித்து, வேலையிலிருப்பவர்களைப் பற்றி அப்புறம் - இப்போது நாம் பார்க்கப் போவது - எதோ ஒரு இளநிலைப் பட்டமோ, அல்லது முதுநிலைப் பட்டமோ வாங்கி, கல்யாணத்தை எதிர்பார்த்துக் கொண்டோ, அல்லது கல்யாணம் செய்து கொண்ட பின், படித்த படிப்பு வேலைக்குச் சென்று சம்பாதிக்க உதவவில்லையே, என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காக!
முதலில் முதல் இல்லாமல் தொடங்குவது, மற்றும் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்படி, வருமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?
books
முதலீடு இல்லாமல் எந்தத் தொழிலும் தொடங்கவும் முடியாது, சம்பாதிக்கவும் முடியாது. பின்னே? உங்களுடைய படிப்பறிவும், நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கும் நேரமும்தான் முதலீடு. நான் சொல்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது பற்றித்தான்.
இவ்வளவுதானா என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அழகாகத் திட்டமிட்டு, செயல் படுத்தினால், நல்ல வருமானமும், கௌவரமும், மதிப்பும் தரும் தொழில் இது. முதலில் நாம் செய்ய வேண்டிய களப் பணித் திட்டங்கள் பற்றி பார்ப்போம். (Base Work and Plans).
உங்களுடைய பட்டப் படிப்பில்/முது நிலைப் படிப்பில் எது சிறப்புப் பாடம்?
மொழி, விஞ்ஞானம், கணக்கியல், கணிதம், உயிரியல், சரித்திரம், கணினியியல் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களால் அடிப்படைப் பாடங்களை, 6 வயது முதல் 14 வயது வரை - அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை - புரியுமாறு சொல்லிக் கொடுக்க, கண்டிப்பாக முடியும். இதற்கு முதலில் உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளிகளின் பாடத் திட்டம், பெற்றோர், மாணவர்களின் பொருளாதார வசதி, போன்ற சில தகவல்கள் அறிந்து கொள்வது நல்லது. இது தவிர உங்கள் பகுதியிலோ, அல்லது அருகாமையிலோ டியூஷனுக்கு - வகுப்பு வாரியாக - என்ன கட்டணம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டின் இட வசதியைப் பொறுத்து, டியூஷன் எடுப்பதற்கு என்று ஒரு இடத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்த இடம் வீட்டில் மற்றவர்களுடைய புழக்கத்திற்குத் தொந்தரவாக இல்லாமலும், படிக்க வரும் மாணவர்களுடைய கவனம் சிதறாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். (அதாவது தொலைகாட்சிப் பெட்டி, வானொலி இல்லாமல்).
work from home
எந்த நேரத்தில் வகுப்புகள் எடுக்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். காலையில் 6 மணி முதல் 8 மணி வரை, மீண்டும் மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரை - இப்படி - வரையறுத்துக் கொள்ளுங்கள். அதிக செலவு பிடிக்காத முறையில் ஒரு அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில் மாட்ட முடிந்தால் நல்லது. (”இங்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கப் படும்”)
எடுத்த எடுப்பிலேயே மிகவும் சிறிய குழந்தைகளையோ அல்லது பள்ளியிறுதி வகுப்பில் அதிக மதிபெண்கள் எடுப்பதை எதிர் நோக்கும் மாணவர்களையோ உங்கள் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இது உங்கள் பொறுமையையும் கற்பிக்கும் திறமையையும் பொறுத்தது.
வகுப்புகள் எடுக்கும்போது, வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாயம் போன நைட்டியிலோ, தலை வாராமலோ இருக்காதீர்கள். மாணவர்களிடம் “இந்தக் கணக்கை போட்டுக் கொண்டு இருங்கள், இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, அடுப்படியில் போய் உப்புமாவுக்கு தாளித்துக் கொட்டாதீர்கள்.
மாணவர்கள் வரும் போது உங்கள் முழுக் கவனமும் அவர்கள் மீது இருக்கும் வகையில், வீட்டு வேலைகளை முதலிலேயே முடித்து விடுங்கள். சுத்தமான உடை உடுத்தி, நன்கு தலை வாரி, பளிச்சென்று இருங்கள்.
மாணவர்களைக் கொண்டு விட வரும் பெற்றோர்கள், அவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம், மரியாதையோடு, அதே சமயம், அளவோடு பேசுங்கள். தேவையில்லாத, வீண் அரட்டை வேண்டாம்.
பொதுவாகவே டியூஷன் என்பது, பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடத்தை செய்யும் இடமாகவே கருதப் படுகிறது. முன்பு படிப்பு வராத மாணவர்களுக்கு டியூஷன் என்ற நிலை மாறி, இப்போது நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இன்னும் அதிக மதிப் பெண்கள் எடுக்கவும், மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். எனவே நீங்கள் சிறப்பாக வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாணவனின் மதிப்பெண்ணின் தரம் உயர்ந்தால் வாய் மொழியாகவே செய்தி பரவி, அதிக மாணவர்கள் உங்கள் வகுப்பில் சேருவார்கள்.
சேரும் குழந்தைகளை வகுப்பு வாரியாகப் பிரித்து, அவர்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்திலேயே அவர்கள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஆறாம் வகுப்புக் குழந்தைகள் அனைவரும் மாலையில் 5 - 6 , இது போல.
பள்ளிக்கு மட்டுமல்ல - உங்களது வகுப்புகளுக்கும் ஒரு பாடத் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் பள்ளியில் ஏற்கனவே நடத்திய பாடத்தை நடத்துதல், Doubt Clarification ஒரு நாள், புதிய பாடத்துக்கு அறிமுகம், தினமுமே பள்ளியில் தரப் பட்ட வீட்டுப் பாடங்களை சிரமமின்றி முடிக்கிறார்களா என்று பார்த்தல், இப்படியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே பள்ளியில் பாடத் திட்ட சுமையால் திணறும் மாணவர்களை மேலும் சுமையேற்றாதீர்கள். Quiz Programme, Open Book Test, Discussion போன்ற முறைகளினால் பாடங்களை விருப்பமுடன் படிக்கத் தூண்டுங்கள். பள்ளியில் தரப்படும் ராங்க் கார்டுகளை நீங்களும் பாருங்கள். அவர்களது முன்னேறத்தைக் கவனியுங்கள்.
பூக்கடையானாலும் விளம்பரம் தேவை, உங்களுடைய கற்பித்தலினால் மாணவனிடம் நல்ல முன்னேற்றம் தென் பட்டால், அதை அவர்களது பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். முதலில் கொஞ்ச நாள் பொதுவாக எல்லாப் பாடங்களுக்கும் டியூஷன் எடுத்த பிறகு, Time Management, Inter personal Skills எல்லாம் வசமாகி விடும்.
பின் பெரிய வகுப்புகளுக்கு - கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியல் போன்ற பாடங்களுக்கு மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம். இதற்கான பயிற்சிக் கட்டணமும் அதிகமாகக் கிடைக்கும். கணிதவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க முடிந்தால் - அஞ்சல் வழிக் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்கள், நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் போன்றவர்களுக்கு வார இறுதி, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் என்று பயிற்றுவிக்கலாம், கணிசமான தொகையும் கட்டணமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
சரி, மாதம் எவ்வளவு வருமானம் வரும் என்று நினைக்கிறீர்கள்?
குறைந்த பட்சம் ஐயாயிரத்திலிருந்து - இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். உங்கள் ஈடுபாட்டையும், திறமையையும் பொறுத்து. எங்கள் ஊரில் Accountancy, Maths இரண்டு மட்டும் கல்லூரி மாணவர்களுக்கு, காலையிலும் மாலையிலும், பயிற்றுவிக்கும் சில கல்லூரி ஆசிரியர்கள் - மாதம் முப்பதினாயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்! முக்கியமாக, இதற்கு வருமான வரி எதுவும் கிடையாது.
என்ன, தயாராகி விட்டீர்களா?

இனி ஒரு பணி செய்வோம் - 2
முதல் பகுதியைப் படித்து, உற்சாகப்படுத்திய தோழிகளுக்கு நன்றி.
தோழி யோகராணி, தான் இருக்கும் பகுதியில் டியூஷன் எடுக்க வாய்ப்புகள் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். தோழி, நார்வே நாட்டிற்கு சென்று, அங்கு அந்த நாட்டு மொழியைக் கற்றுத் தேர்ந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சிறிய யோசனை. பயன் படுமா என்று பாருங்கள். நிறைய தமிழர்கள் அங்கு இருப்பார்கள். அங்கு உள்ள பள்ளிகளில் அவர்கள் குழந்தைகள் தமிழ் கற்க வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. உங்களுக்கு நேரமும், விருப்பமும் இருக்குமானால் அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு, அடிப்படை தமிழ் பேச, எழுத, கற்றுக் கொடுக்கலாமே. ஒரு குழுவாகக் கற்றுக் கொள்ளும்போது, குழ்ந்தைகளும் வேகமாக கற்றுக் கொள்வார்கள் இல்லையா!
இனி, இந்த வாரமும், வீட்டில் இருந்தபடியே, ஓய்வு நேரத்தில் பணி செய்வதற்கான சில யோசனைகளைப் பார்ப்போமா?
அதற்கு முன் சில வார்த்தைகள் – இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் பெரும்பாலானவை, நான் பார்த்து வியந்த, வெற்றிகரமாக, பொருளீட்டும் பெண்மணிகளின் அனுபவங்கள்தான். அவர்களிடம் பேசி, அறிந்து கொண்ட விஷயஙளையே உங்களிடமும் சொல்ல விரும்புகிறேன்.
அறுசுவைத் தோழிகள் நிறையப் பேர் கை வேலைகள் செய்வதிலும் கற்பனைத் திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றும் நிறைய சகோதரிகளுக்கு தானே வரைவதிலோ, கை வேலை செய்வதிலோ விருப்பம் இருந்தாலும், சரியாக வர வில்லயென்றால் என்ன செய்வது என்ற தயக்கம் இருக்கலாம். எல்லோருக்குமான யோசனைதான் இது.
work from homeசுவரில் தொங்க விடுவதற்கான துணியினாலான படங்கள் – அடிப்படை வர்ணங்கள் மட்டும் கொண்டவையாக, மெரூன், பிரவுன், கருப்பு முதலிய நிறங்களில் கிடைக்கும். இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். (கீதோபதேசப் படங்கள், ராதை-கண்ணன், இயற்கைக் காட்சிகள் இது போல பார்த்திருப்பீர்கள்)
வித விதமான சம்கி, பாசி மணிகள், வண்ணத் துணித் துண்டுகள், பொன் வண்ண, வெள்ளி வண்ண இழைகள், கலர் ஜிகினாத் துகள்கள், இப்படி – உங்களுக்கு எது எல்லாம் கிடைக்குமோ, அவற்றால் இந்தப் படங்களில் பொறுமையாக ஒட்டி, அலங்கரியுங்கள். பிறகு, தரமான, வண்ண மயமான ஃப்ரேம் செய்து கொள்ளுங்கள். இப்போது அழகிய பரிசுப் பொருள் தயார்.
முதலில் சிறிய அளவிலான துணிகளில் கை வேலை செய்து பழகுங்கள். பின் சற்றே பெரிய படங்களை தயார் செய்யலாம். சரி, மாதம் எத்தனை படம் தயார் செய்ய முடியும், இதற்கு எவ்வளவு செலவாகும், இதை யாரிடம் விற்பது, லாபம் கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுகிறதல்லவா?
சொல்கிறேன். அதற்கு முன்னால் சந்தைப்படுத்துதல், பொருள்களின் விலை நிர்ணயித்தல் போன்றவற்றைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?
Marketing, Price Fixing பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு நாம் என்ன பெரிய விற்பனை நிறுவனமா நடத்துகிறோம் என்று தோன்றுகிறதா? சம்பாதிப்பது என்று ஆரம்பித்து விட்டாலே, லாபம், அல்லது நஷ்டம் இல்லாமல் விற்பது பற்றியெல்லாம் யோசிக்கத்தான் வேண்டும்.
work from homeகிராமங்களில் மிகச் சிறிய அளவில் பண்டம் விற்பவர்களிடம், என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? “அட என்னம்மா, ஏதோ தம்பிடிக்கு தம்பிடிக்கு லாபம் கிடைக்குது, அவ்வளவுதான்” என்று அலுப்பான குரலில் சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா, 100 சதவிகிதம் – அதாவது 10 ரூபாய்க்கு வாங்கியதை, 20 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று பொருள்! மிகப் பெரிய தொழில்களில் கூட அதிக பட்சம், 10 முதல் 20 சதவிகிதம்தான் மார்ஜின் நிற்கும்.
நாம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஒரு தொழில் செய்யும் போது, தனியாக லேபர் சார்ஜ் கிடையாது. நமது வசதிப்படி அதிக நேரம் வேலை செய்ய முடியும். நமது கிரியேடிவிடிக்கு குறுக்கீடுகள், எல்லை கிடையாது. பொருளின் விலையை நாமே தீர்மானிக்கலாம். இப்படி பல நன்மைகள், அதிக லாபத்துக்கு வழியாக இருக்கின்றன.
சரி, இப்போது மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன். பார்ப்பதற்கு சிம்பிள் ஆகத் தோன்றினாலும், மிகவும் நேரம் எடுத்து செய்ய வேண்டிய வேலை இது. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு வண்ணங்களாலும், ஜிகினாத் துகள், துணித் துண்டுகள், சம்கி, பாசி போன்ற வேறு பட்ட பொருள்களால் அலங்கரிக்கும் போது, ஒட்டுவதற்கும், காய்வதற்கும், அடுத்த பகுதியில் தொடர்வதற்கும் நேரம் ஆகும். ஒரு மீடியம் சைஸ் படம் ரெடி செய்ய (நமது வீட்டுப் பொறுப்புகளின் மத்தியில்) 10 முதல் 20 நாட்கள் கூட ஆகலாம்.
அலங்கரிக்கத் தேவையான பொருட்களை மொத்தக் கடையில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். படம், ஒட்டும் பொருட்கள் இவற்றின் அடக்க விலை 500 ரூபாய் வரைக்கும் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அழகான ஃப்ரேம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் ஆகலாம். (நான் சொல்வதெல்லாம் உத்தேசமான செலவுதான்.) இவற்றை கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் விற்கும் போது தாராளமாக 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரைக்கும் விலை வைக்கலாம். ஏனெனில் உங்களின் கற்பனைத் திறன் மற்றும் உழைப்புக்கு இதில் விலை சேர்க்க வேண்டுமே. மேலும் ஒரு பொருள் unique ஆக இருக்கும் போது அதன் மதிப்பு அதிகம் ஆகத்தானே செய்யும்.
சரி, அடுத்தது – மார்கெட்டிங்.
முதலில் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் போது இப்படி நீங்களே செய்த படங்களைக் கொடுங்கள். கண்டிப்பாக மற்ற நண்பர்கள், உறவினர்கள் விசாரிப்பார்கள். வீட்டில் இந்த மாதிரி படங்கள் செய்வதைப் பற்றி சொல்லுங்கள். உங்களுக்கும் வேண்டுமானால் செய்து தருகிறேன் என்று கேளுங்கள். படங்களின் அளவு, அதிகமான, நுணுக்கமான வேலைப் பாடுகள், விலை அதிகமான, தரமான ஃப்ரேம், இவற்றைப் பொறுத்து, படங்களின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கலாம். மாதம் ஒன்றிரண்டு படங்கள் செய்தாலே நல்ல லாபம் பார்க்கலாம்.
இது தவிர, உங்கள் பகுதியில் மாதர் சங்க விழா போன்றவை நடந்தால் உங்கள் படங்களை காட்சிக்கு வைக்கலாம். இதுவும் வாடிக்கையாளர்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
இதில் நீங்கள் மேலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் – சொன்ன தேதியில் பொருளைக் கொடுத்து விடுங்கள். விலையில் பேரமே வேண்டாம். முதலிலேயே தொகையைச் சொல்லி விடுங்கள். அழகான கலைப் பொருள்களுக்கு விலைமதிப்பு எப்போதுமே அதிகம்தான்.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒரு படத்துக்கு 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரை விலை வைக்கின்றார். அவருக்கு பணத்தேவை என்பது அதிகம் இல்லையென்றாலும், இந்த வேலை மனதுக்கும் திருப்தி, செய்வதற்கும் உற்சாகம், அத்துடன் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டும், பணமும் தனக்கு போனஸ் என்கிறார் அவர்.
நான் மேலே சொல்லியிருப்பது எல்லாம் அடிப்படையான யோசனைகள்தான். மேற்கொண்டு சிறப்பாக எவ்வளவோ உங்களால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி

இனி ஒரு பணி செய்வோம் - 3
தோழிகள் முதல் இரண்டு பாகங்களும் படித்து இருப்பீர்கள். உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.
பொதுவாக நமக்கு விருப்பமான ஒரு விஷயத்தை, வருமானம் தரும் தொழிலாகவும் மாற்றிக் கொள்ளும்போது, இன்னும் அதிக ஈடுபாடு ஏற்படும் அல்லவா! அந்த வகையில் சென்ற இரண்டு பகுதிகளையும் பொறுத்த வரையில் – கற்பித்தல் மற்றும் கை வேலை இவற்றில் ஆர்வம் உடையவர்களுக்கு பொருத்தமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இந்த வாரம் நாம் பார்க்கப் போவது – வீட்டில் தாராளமாக இடம் இருக்கிறது, ஏராளமாக நேரமும் இருக்கிறது, பொழுதுதான் போகவில்லை, என்ன செய்யலாம் என நினைக்கிறீர்களா? குழந்தைகள் எல்லாம் செட்டில் ஆகி விட்டார்கள் – ஆனால் துறு துறுவென்று உழைத்துக் கொண்டிருந்த நான் இப்போது என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா?
நான் சொல்லும் இந்த சேவைப் பணி உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று பாருங்களேன்.
சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் க்ரச்(creche) என்று சொல்லப்படும் குழந்தைகள் காப்பகம் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.
கூட்டுக் குடும்பங்கள் இல்லாத சூழ்நிலை, வேலைக்கு செல்லும் பெண்கள் சக பணியாளர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் காரியர் வளர்ச்சி பற்றி கவனம் செலுத்த வேண்டிய நிலை, அதிக விடுமுறை எடுக்க முடியாதது, வீட்டில் தனிப்பட்ட முறையில் ஆள் வைத்துக் கொள்ள முடியாதது, இப்படி பல காரணங்களால் குழந்தைகள் காப்பகம் மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் அனுபவம் நிறைந்த, நம்பகமான க்ரச் கிடைத்தால் அது மிகப் பெரிய வரம்தான்.
இந்த சேவை தேவைப்படுவது 3 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்குதான். எனவே, அதீத பொறுமை, சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். துணைக்கு ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்கள் தேவைப்படலாம்.
இது தவிர, முதலீடு என்று சொல்ல வேண்டும் என்றால், குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலர், படுக்கைகள், விளையாட்டுப் பொருட்கள் இவை போன்றவற்றை வாங்க வேண்டியிருக்கும்.
முதலிலேயே சொன்ன மாதிரி, தேவை அதிகம் உள்ள சேவை என்பதால் வாடிக்கையாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
குழந்தைகளின் பெற்றோர் பெயர், விலாசம், தொலைபேசி எண், அலுவலக விலாசம், அவசரத்தேவை எனில் தொடர்பு கொள்ள ஆல்டர்னேடிவ் எண், குழந்தைகளின் வயது, உணவுப் பழக்கம், அவர்களது குடும்ப டாக்டரின் தொடர்பு எண், விலாசம், தினசரி கொடுக்க வேண்டிய டானிக், மருந்து போன்ற விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களும் அடங்கிய படிவம் ஒன்றைத் தயார் செய்து அதை பெற்றோர்கள் பூர்த்தி செய்து தருமாறு கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை பெற்றோர் கொண்டு வந்து தரும் உணவுகளையே குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
அவர்களுக்கான உணவு, மாற்று உடை, போன்றவை அடங்கிய கூடைகள் தனித் தனியாக இருக்கட்டும்.
குழந்தைகளுக்கு உணவு அந்தந்த நேரத்தில் சரியானபடி கொடுக்கப்பட வேண்டும்.
work from homeகுழந்தைகள் வெகு சுலபமாக புதிய சூழலில் பழகி விடுவார்கள். (பள்ளிகளில் பார்த்திருக்க முடியும் – கிண்டர் கார்டன் வகுப்புகளில் சேர்ந்த முதல் வாரத்தில் கண்ணும் மூக்கும் சிவக்க அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகள், அடுத்த இரண்டொரு வாரங்களில் தங்கள் இடங்களில் சரியாக அமர்ந்து கொள்வதும், மதியம் வகுப்பு மிஸ் சொல்படி கேட்டு சமர்த்தாக சாப்பிடுவதும், பின் மிஸ் “all close your eyes, put your heads down, sleep” என்று கட்டளையிட்டதும் டபக்கென்று மேஜையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டு தூங்குவதும் – கண் கொள்ளா காட்சி)!
மதியம் காற்றோட்டமான இடத்தில் குழந்தைகளை தூங்கி எழ பழக்கி விடுங்கள்.
மாலையில் சிறிது வெட்ட வெளியில் விளையாட, வேடிக்கை பார்க்க வைக்க, முடிந்தால் நல்லது.
பார்த்துக் கொள்ளும் நேரம் எது என்பதை முதலிலேயே தெளிவாக பெற்றோர்களிடம் பேசி விடுங்கள்.
ஏதேனும் எமர்ஜென்ஸி தேவைப் பட்டால் தொடர்பு கொள்ள, உங்கள் இடத்துக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனை விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இனி இந்தத் தொழிலில் எதிர்பார்க்கக் கூடிய சில சிரமங்கள், அவற்றை எதிர் நோக்குவது எப்படி என்று பார்க்கலாமா?
குழந்தைகள் புது இடத்தில் பழக சில நாட்கள் ஏற்படலாம். பொறுமை தேவை.
குழந்தைகள் அசுத்தம் செய்தால், முகச் சுழிப்பில்லாமல் சுத்தம் செய்ய, இடத்தை பராமரிக்க, நல்ல பழக்கங்களுடன், தானும் சுத்தமாக இருக்கக் கூடிய உதவியாளர்கள் வேண்டும். இவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யுங்கள்.
குழந்தைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடலாம், அடித்து, கிள்ளி வைத்து விடலாம். இதெல்லாம் சமாளிக்க வேண்டும்.
எதிர்பாராமல் உடல் நலம் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கே உரித்தான வாந்தி, வயிற்று போக்கு, காய்ச்சல், அடி படுதல், இதெல்லாம் திடீரென ஏற்படலாம். கைவசம் இதற்கு உண்டான, உடனடியாக தேவைப்படும் சிரப்கள், மருந்துகள், தெர்மா மீட்டர் போன்றவைகள வைத்து இருங்கள். அதே சமயம், சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் சரியான தகவலகளை சொல்லி விடுங்கள். (உ-ம். மதியத்திலிருந்து காய்ச்சல், பாரசிடமால் சிரப் ஒரு முறை கொடுத்து இருக்கிறோம்... இப்படி) அதே போல குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு இருந்தால் பெற்றோர்களும் உங்களிடம் சரியான தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருங்கள்.
நீங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது சற்று சிரமம். அப்படிப்பட்ட சூழலில், வாடிக்கையாளர்களிடம் முடிந்த வரை, முன் கூட்டியே சொல்லி விடுங்கள்.
இனி, இந்த சேவைப் பணியில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்க்கலாமா?
மிகவும் தேவைப்படும் சேவை என்பதால், நல்ல வரவேற்பு இருக்கும். உங்கள் பணி சிறப்பாக இருக்கும் பட்சத்தில், வாய்மொழி மூலமாகவே வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.
வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள துறை இது. அதிகக் குழந்தைகளை சேர்க்க முடிந்தால், சிறிய அளவில் பிளே ஸ்கூலையும் சேர்த்து நடத்தலாம்.
இன்னும் ப்ரொஃபஷனல் ஆக நடத்த விரும்பினால், குழந்தைகள் விளையாடும் இடத்தில், குளோஸ் சர்க்யூட் காமிரா, மற்றும் பெற்றோர் அடிக்கடி தொலைபேசியில் பேச விரும்பினால், அதற்கென தனியான உதவியாளர் என கூடுதல் வசதியான சேவைகளை அளிக்கலாம். இதற்கென கட்டணமும் கூடுதலாக இருந்தாலும், நல்ல இடத்தில் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பதனால், பெற்றோர்கள் மனமுவந்து பணம் கட்டுவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக சின்னஞ்சிறு மழலைகளுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் ஆனந்தம் தரும் விஷயமாயிற்றே! அதே போல நமது வாடிக்கையாளர்களான தாய்மார்கள் அடையும் நிம்மதி, நமக்கும் மகிழ்ச்சிதான் அல்லவா!
அன்புடன்
சீதாலஷ்மி

இனி ஒரு பணி செய்வோம் - 4
அன்பு தோழிகளுக்கு,
நலம்தானே, மீண்டும் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
வீட்டிலிருந்தே வருவாய் ஈட்டுவதற்கான பல்வேறு வாய்ப்புகள், அதில் உள்ள சிறப்புகள், பற்றி - சென்ற மூன்று பகுதிகளில் பேசினோம். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
இந்த வாரம் நாம் பேசப் போவது – வீட்டிலிருந்தபடியே டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்வது பற்றி.
வியாபாரம் செய்பவர்கள் வெற்றி அடையவில்லையென்றால் சொல்லும் சாக்கு இது – “நான் உப்பு விக்கப் போனால் மழை பெய்யுது, மாவு விக்கப் போனால் காத்தடிக்குது” என்பதுதான். நீங்க ஏன் மழை பெய்யும்போது உப்பையும், காற்று அடிக்கும்போது மாவையும் விற்கப் போனீர்கள் என்று யார் கேட்பது.
எந்த ஒரு விற்பனைத் தொழிலிலும் – அது சிறியதோ, பெரியதோ, சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விலையில், சரியான பொருளை விற்றால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் இந்தத் தொழிலைக் கையாளும் விதம் பற்றி சொல்கிறேன்.
இவர் மதுரையில் வசிப்பவர். இவரது உறவினர் மதுரையிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறார். உறவினரின் கிராமம் சுற்று வட்டாரத்திலும் சில கிராமங்களைக் கொண்ட இடம். (பதினெட்டு பட்டி என்பார்களே அது மாதிரி).
மதுரையில் வசிக்கும் பெண் வாரம் ஒரு முறை சிந்தடிக் சேலைகள், (பூனம் சாரிகள், சூரத் சாரிகள்) – மதுரையிலுள்ள கடைகளில் வாங்கி, தனது உறவினர் மூலம் கிராமங்களில் விற்பனை செய்கிறார்.
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மதுரை வரும் பயண நேரம், செலவு இதெல்லாம் மிச்சம். அதனால் இந்த சேலை விற்பனை நல்ல வருமானம் தருகிறது அவருக்கு.
சரி, இதைப் பார்த்ததும், சென்னையில் வசிக்கும் பெண் – நானும் மதுரையிலிருந்து சேலைகள் வாங்கி, வீட்டில் வைத்து விற்கிறேன் என்றால் லாபம் வருமா?
சந்தேகம்தான். காரணம் மேலே சொன்ன சேலை ரகங்கள் தி.நகரில் கொட்டிக் கிடக்கிறது. அதிலும் சென்னை வாசிகள் கண்டிப்பாக பிரபல கடைகளில்தான் இந்த ரகப் புடவைகளை வாங்குவார்கள் இல்லையா?
சென்னை போன்ற பெரு நகரத்தில், ஷாப்பிங் என்பது தினசரி காபி சாப்பிடுவது போல, மக்களுக்கு ஒரு அடிக்‌ஷன் ஆகி விட்டது. அப்படியெனில் மாநகரங்களில் வசிப்பவர்கள், சிறிய அளவில் பிஸினஸ் செய்வது சாத்தியமா, இல்லையா? என்று கேட்டால் – முடியும் என்பதே என் பதில்.
மேலே சொன்ன விஷயத்தையே ஒரு சிறிய உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.
சேலையோ, சாக்லேட்டோ - கடைகளில் கிடைப்பதை விட சற்று விலை குறைவாக, தரமானதாகக் கிடைத்தால் வாங்குவதற்கு மக்கள் தயார். அதே சமயம் அது fast moving ஆக இருந்தால்தான், நாம் போட்ட முதல் ஐ சீக்கிரம் எடுத்து, இலாபம் பார்க்க முடியும்.
சென்னையில் விற்க நினைக்கும் நபர் மதுரையிலிருந்து சுங்குடி சேலைகள், பட்டு நூல் சேலைகள், டர்க்கி டவல்கள், காரைக்குடி காட்டன் சேலைகள் என்று வரவழைத்து விற்கலாம்.
ஈரோடு பக்கம் உதவிக்கு ஆள் உண்டா? போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வரவழைக்கலாம்.
கோயம்புத்தூர் அடிக்கடி போக முடியுமா? Unstitched சுடிதார் மெட்டீரியல்கள் மலிவான விலைக்கு வாங்கி, இங்கு விற்க முடியுமே!
சில உதாரணங்கள் மட்டும் கொடுத்து இருக்கிறேன். சேலை என்றில்லாமல் டெக்ஸ்டைல் பிஸினஸ் என்று பொதுவாகக் கொடுத்து இருக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
முதலீடு சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களால் எவ்வளவு வேகமாக சுழற்சி செய்ய முடிகிறது என்று பாருங்கள். 5000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், வாரம் ஒரு முறை முழுவதும் விற்று, உடனே அடுத்த வாரத்துக்கு உண்டான துணிகளை வரவழைக்க முடிந்தால், உங்கள் முதலீடு என்பதை மாதத்துக்கு 20000 ரூபாய் என்று உத்தேசமாகக் கணக்கிடலாம்.
கூடுமானவரை உங்கள் சேமிப்பையே முதலீடாகக் கொண்டு தொடங்க முயற்சி செய்யுங்கள். கடன் வாங்க வேண்டாம். ஏனெனில், சரக்குகள் முழுவதும் விற்றால்தான் வரும் இலாபத்தில் நீங்கள் வட்டி கட்டி, அசலையும் அடைக்க முடியும். அப்படியில்லாமல், ஒருவேளை, (உங்கள் இலாபத்துக்கு உண்டான) ஒரு சிறிய பகுதி விற்காமல் தேங்கி விட்டால், வட்டியே கட்ட முடியாத நிலை வந்து விடக் கூடாதல்லவா?
முதலீடு செய்து, வியாபாரம் செய்யும்போது No Loss, No Gain என்ற Break Even புள்ளியை அடைய சில காலம் ஆகும். அது வரை பொறுத்து இருக்க வேண்டும்.
ஜவுளி விற்பனையைப் பொறுத்த வரையில், வீட்டில் ஒன்று அல்லது இரண்டு அலமாரிகள் போதுமானதாக இருக்கும். அதிக இடம் தேவைப் படாது. ஜவுளிகளை மாதத் தவணை முறையில் விற்பதா, அல்லது cash and carry யாக ரொக்கத்துக்கு விற்பதா என்பதை, நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் வாடிக்கையாளர்கள், மற்றும் பணம் வசூல் செய்வதில் உங்களுக்கு உள்ள திறமை, தவிர உங்களுக்கு பொருள் சப்ளை செய்பவர்கள் பணம் செலுத்தக் கொடுக்கும் கால அவகாசம் போன்ற பல் வேறு விஷயங்களை வைத்துத் தீர்மானியுங்கள்.
தவணை முறை என்றால் சிறிது விலை அதிகம் வைத்து விற்கலாம். உடனே பணம் என்றால் சிறிது discount கொடுக்கலாம். டிஸ்கவுண்ட், ஃப்ரீ என்பதெல்லாம் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் மாஜிக் வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!
வாடிக்கையாளர்களின் இரசனை அறிந்து, அதற்கேற்றார்போல வியாபாரம் செய்வது நல்லதுதான். அதே நேரம் உங்களுடைய Capability, Limitation இவற்றையும் கவனத்தில் வையுங்கள்.
சரி, நல்ல இலாபம் கிடைக்குமா? கண்டிப்பாகக் கிடைக்கும். ஜவுளி வகைகளில் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும். காரணம், விற்பனையாக எடுத்துக் கொள்ளப்படும் அவகாசத்துக்கு உண்டான வட்டி என்று காரணம் சொல்வார்கள்.
எந்த அளவுக்கு இலாபம் என்பதை ஒரு நகைச்சுவை கதையை சொல்லி விடை பெற நினைக்கிறேன்.
ஜவுளிக்கடை முதலாளி மதியம் சாப்பாட்டு நேரத்தில்,. மகனை கடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.
மகனுக்கோ விற்பனையில் ஏதும் அனுபவம் கிடையாது. அன்றுதான் முதன் முதலாகக் கடைக்கு வந்து இருக்கிறான்.
“யாராவது வாங்க வந்தால் நான் என்ன செய்ய?” என்று கேட்டான்.
”ஒன்னும் கவலைப் படாதே, எல்லாத்துலயும் விலைச் சீட்டு ஒட்டியிருக்கு, அதன்படி பாத்து, பில் போடு, நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி விட்டுப் போனார் அப்பா.
சாப்பிட்டு விட்டு வந்ததும், மகன் சந்தோஷமாக “அப்பா, ஒரு வேஷ்டி விற்றேன், இந்தாங்க பணம்” என்று பதினெட்டு ரூபாய் கொடுத்தான்.
“அடப் பாவி” என்று அலறினார் அப்பா.
”என்னப்பா” என்று பதறினான் மகன்.
”அது எண்பத்தி ஒரு ரூபாய் என்றல்லவா சீட்டு ஒட்டி இருந்தேன், அதை தலை கீழாகப் பாத்து, பதினெட்டு ரூபாய்க்கு கொடுத்து இருக்கியே” என்று புலம்பிய அப்பா, மெதுவாகச் சொன்னார் – “சரி போ, அப்படின்னாலும், அதிலேயும் பத்து ரூபாய் இலாபம்தான்” என்று!!!
தோழிகளில் யாரேனும் ஜவுளிக் கடை நடத்தி வருபவர்களாக இருந்தால் டென்ஷன் ஆக வேண்டாம். இலாப விகிதம் மிகவும் அதிகம் என்று சொல்வதற்காக சற்று மிகைப்படுத்தப் பட்ட ஜோக்தான் இந்தக் கதை.
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி

இனி ஒரு பணி செய்வோம் - 5
அன்புத் தோழிகளுக்கு வணக்கம்.
இது வரை வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி என்று பார்த்தோம். இதையே இன்னொரு விதமாக சொல்வதானால், மாதச் சம்பளமாக இல்லாமல், நம்மிடம் ஏற்கனவே இருக்கும் திறமைகளைக் கொண்டு, நமக்கு வசதியான நேரத்தில் உழைத்து, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழிகள் எவை என்று பேசினோம்.
தொடர்ந்து இந்தப் பகுதியிலும் “I AM MY OWN BOSS” ஆக நீங்களே ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்துவதைப் பற்றி சொல்கிறேன்.
”எனக்கு நல்ல பேச்சுத் திறமை உண்டு, யாரை எப்படி வேலை வாங்க வேண்டும், எந்தப் பொருள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி, வண்டி ஓட்டத் தெரியும், வீட்டில் எந்த பொறுப்பான வேலை/விஷேசம் என்றாலும் நானேதான் முன்னின்று நடத்துவேன்” இப்படி உங்களைப் பற்றி உங்களுக்கு ஒரு Self Assessment உண்டா!!!
அப்படியானால் நிச்சயமாக நீங்கள் EVENT MANAGEMENT என்ற தொழிலை மிகச் சிறப்பாக நடத்த தகுதியான நபர்தான்.
இன்று நகர்ப் புறங்களில் மிகவும் தேவைப்படும் வெற்றிகரமான தொழில் இது.
முன்பெல்லாம் இல்லங்களில் கல்யாணம், காதுகுத்து, சடங்கு என்று நடக்கும். அதற்கு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என்று ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விடுவார்கள். பிறகு கல்யாணங்களுக்கு காண்ட்ராக்ட் முறை வந்து விட்டது. சமையல் பணியை எடுத்து நடத்துபவர்களே A-Z கல்யாணம் சம்பந்தப் பட்ட வேலைகளை செய்து தருகிறார்கள். கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தும். இதைத் தவிர மற்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால்?
இன்றைய வாழ்க்கை முறையில் “பார்ட்டி” இல்லாத வீடுகள் உண்டா? திருமண நாள் கொண்டாட்டம், புதுமனை புகு விழா, குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், நியூ இயர் பார்ட்டி இது தவிர, அபார்ட்மெண்ட்களில் – பண்டிகைகள், கெட்-டு-கெதர்,
இப்படி எத்தனையோ!
சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கூட – தங்களுடைய ஊழியர்களை உற்சாகப் படுத்துவதற்காக வருடாந்திரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த மாதிரி விழாக்களை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பதுதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்.
கேள்வி பதில் மாடலில் பேசலாமா?
முதலில் நான் செய்ய வேண்டியது என்ன?
நீங்கள் ஒரு ஈவண்ட் மானேஜ்மெண்ட் கோ ஆர்டினேட்டராக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா! நல்லது. முதலில் இந்தத் தொழிலுக்குத் தேவையான தகவல்களை சேகரித்து, ஒரு டேட்டா பேஸை உருவாக்குங்கள்.
டேட்டா பேஸ்? என்ன மாதிரியான தகவல்கள்?
வாடிக்கையாளர்கள் - யார் - விழாக்கள், பார்ட்டிகள் நடத்துபவர்கள்.
அவர்களின் தேவை என்ன? விழாக்களுக்கான சிறப்பான ஏற்பாடுகள், விருந்து, பரிசுகள் முதலியன.
தேவையான பொருட்கள் கிடைக்கும் இடம், அவற்றை வழங்குபவர்கள், விலை, தரத்தின் ஒப்பு நோக்கு போன்ற விபரங்கள்.
தனியாக அலுவலகம் தேவைப்படுமா?
ஆரம்பத்தில் தேவையில்லை. உங்கள் வீட்டு விலாசம், கைபேசி எண்ணை உபயோகிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் என்னை எப்படி அணுக முடியும்?
உங்கள் அபார்ட்மெண்ட் தகவல் பலகையில் உங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கலாம்.
நண்பர்கள், உறவினர்களுக்கு ஈ மெயில், எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவித்து, விளம்பரம் தேடலாம்.
உங்கள் பகுதியில் வரும் பத்திரிக்கைகளில் பேப்பர் இன்ஸர்ட் வைத்து, விளம்பரம் செய்யலாம்.
நேரடியாக நிறுவனங்களை அணுகி, உங்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடைக் கொடுக்கலாம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான ஐடியா தேவை:
ஒரு உதாரணத்துடன் பேசினால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் லல்லிக்குப் பிறந்த நாள். அவளது பெற்றோர்கள் உங்களை ஈவண்ட் மானேஜ்மெண்ட்டுக்காக அணுகுகிறார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்திக் கொடுப்பீர்கள்?
இந்த இடத்தில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். அறுசுவையின் மற்ற பகுதிகளைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, பின் ஒரு பேப்பரை எடுத்து, என்னவெல்லாம் செய்வீர்கள் என்று எழுதுங்கள்.
என்ன இது பரீட்சையா என்று தோன்றுகிறதா, நமக்கு நாமேதானே மார்க் போட்டுக் கொள்ளப் போகிறோம், சரிதானே.
என்ன, யோசித்து விட்டீர்களா? சரி, பார்க்கலாம்.
முதலில் லல்லியின் பெற்றோர்களிடம் நிறையப் பேசி, டிஸ்கஸ் செய்ய வேண்டும்.
என்றைக்கு பிறந்த நாள், விழா நடக்கும் நேர அளவு, எத்தனை பேர் வருவார்கள், பெரியவர்கள், குழந்தைகள் எத்தனை பேர், நடக்கும் இடம், முக்கியமாக அவர்களின் பட்ஜெட்....
விழா நடக்கும் நேரம் தெரிந்ததும் விருந்து எப்படி இருக்க வேண்டும், மெனு இதெல்லாம் முடிவு செய்து விடலாம்.
வரும் விருந்தினர்களுக்கான கேம் ஷோ, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், ரிடர்ன் கிஃப்ட், அதற்கான பட்ஜெட்...
பார்ட்டி ஹாலின் அலங்காரம், விருந்தினர்களுக்கான இருக்கைகள், புகைப் படம், வீடியோ எடுக்க ஏற்பாடுகள், முக்கியமாக கேக்கின் அளவு, சுவை, அதில் எழுத வேண்டிய வாசகம்.. இப்படி எந்த சின்ன தகவலையும் விட்டு விடாமல், கவனமாகக் கேட்டு, குறித்துக் கொள்ளுங்கள்.
அப்பாடி, இத்தனை வேலையையும் நானே செய்ய வேண்டுமா? என்று மலைப்பாக இருக்கிறதா? வெயிட்..வெயிட்!
நீங்கள் இந்த வேலைகளை சரியான ஆட்களிடம் ஒப்படைத்து, அவை சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்து, தட்டிக் கொடுத்து, (திட்டி) வேலை வாங்கி, எதேனும் பிரச்னைகள் வந்தால் அழகாக சமாளித்து(பாத்தீங்களா, பாத்தீங்களா, இதெல்லாம் என்னால் எப்படி முடியும்) லல்லியின் பெற்றோர்கள் உங்களிடம் நன்றி சொல்லும் போது, அழகாகப் புன்னகைத்து ...
இரண்டொரு நாளில் பில் அனுப்புகிறேன் என்று சொல்லி.. இவ்வளவுதான், இவ்வளவேதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்.
வேலையில் இறங்கி விட்டால் நீங்கள் எவ்வளவோ கற்றுக் கொள்ளலாம், சாதிக்கலாம், சம்பாதிக்கலாம்.
பேக்கரி, காட்டரர், கேம்ஸ் ஷோ நடத்துபவர், வீடியோகிராஃபர் மற்றும் அலங்காரப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு விலாசங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்று ஏற்பாடுகள் செய்ய, விலை, தரம் ஒப்பிட்டு நோக்க உதவியாக இருக்கும்.
வேலைகளுக்கான செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு, அவ்வப்போது சரி பாருங்கள்.
ரிடர்ன் கிஃப்ட், விருந்து இவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டால், செய்யக்கூடிய/செய்ய வேண்டிய ஆல்டர்னேடிவ் பற்றி முதலிலேயே யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் சரி, வருமானம் என்ன கிடைக்கும்?
நீங்கள் வாங்கிய பொருட்கள், பேக்கரி, காட்டரர் போன்றோருக்குக் கொடுத்த சம்பளம், இப்படி எல்லா செலவினங்களுக்கும் பில், வவுச்சர், பத்திரமாக வைத்துக் கொண்டு, ஒரு ஸ்டேட்மெண்ட் தயாரியுங்கள். (தொலைபேசி, போக்குவரத்து செலவு உட்பட)
இதன் மொத்தக் கூட்டுத் தொகைதான் அசல் செலவு. (Actual Expenses). இந்தத் தொகையுடன் குறைந்த பட்சம் 15 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 15% சதவிகிதம்தான் உங்களுடைய் லாபம்.
சில டிப்ஸ்:
ஆரம்பத்தில் சிறிய பார்ட்டிகளை நடத்திக் கொடுத்து, கொஞ்சம் அனுபவம் வந்த பின், உதவியாளர்களை சேர்த்துக் கொண்டு, பெரிய விழாக்களை நடத்திக் கொடுக்கலாம்.
விழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். இல்லங்களில் நடைபெறுவதும், அலுவகங்களுக்கான கொண்டாட்டங்களும் வேறுபட்டிருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களின் தேவையை சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம்.
என்னதான் சொன்னாலும் ஆண்கள் இந்த மாதிரி மொத்த காண்ட்ராக்ட் எடுத்து நடத்துவது போன்ற வேலையை செய்வார்கள், பெண்கள் செய்வது முடிகிற காரியமா என்ன?
சென்னையில் இரு பெண்கள் – ஷோபா, வித்யா என்று பெயர், அவர்கள் இருவரும் விபா என்ற பெயரில் மிகவும் சிறிதாக ஈவண்ட் மானேஜ்மெண்ட் தொடங்கினார்கள். இன்று சென்னையின் முக்கிய வருடாந்திர நிகழ்வுகள் எல்லாமே அவர்கள் பொறுப்பேற்று நடத்துவதுதான். மிஸ் சென்னை, திருமதி சென்னை, மிஸ்டர் சென்னை, மாம் & ஐ என்று பல நிகழ்ச்சிகள். தவிர மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் விழாக் கொண்டாட்டங்களின் பொறுப்பும் இவர்களிடம்தான்.
நடிகை திரிஷா இவர்கள் நடத்திய அழகிப் போட்டியில் வென்றுதான் பின்னர் மாடலாகவும், இப்போது நடிகையாகவும் மின்னுகிறார்.
இனி செயல்பட வேண்டியது நீங்கள்தான். தயார்தானே!
வாழ்த்துக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி


இனி ஒரு பணி செய்வோம் - 6
அன்புத் தோழிகளுக்கு,
எப்போது உங்களுக்கு நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது?
விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது, செலவுகள் கூடியிருக்கு, கணவரின் சம்பளம் உயரவில்லை என்று தோன்றும்போது..
எவ்வளவுதான் கணவரின் வருமானம் அதிகரித்தாலும், இன்னும் அதிக வருமானம் இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் தரமான கல்வி, நல்ல உடைகள் என்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாமே என்று நினைக்கும்போது..
சொந்த வீடு இருந்தால் நன்றாக இருக்கும், இப்போது கொடுக்கும் வாடகையோடு இன்னும் கொஞ்சம் அதிகப் பணம் சேர்த்து இ.எம்.ஐ. கட்ட முடிந்தால், கொஞ்ச வருடத்தில் வீடு நமக்கு சொந்தமாகி விடும். அல்லது வெகு நாட்களுக்கு முன்னால் வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்டினால் நன்றாக இருக்கும். ஆனால் வங்கிக் கடனுக்கு மாதாமாதம் பெரிய தொகை கட்ட வேண்டுமே, என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது..
இப்போ பையனுக்கும் பெண்ணுக்கும் ஸ்கூல் செலவுகள் சமாளிக்கவே சிரமமாக இருக்கு. இன்னும் கொஞ்ச வருஷம்தான், இப்பவே பணம் சேமிக்க ஆரம்பித்தால்தான் இன்சினீயரிங், மெடிக்கல் என்று பல லட்சங்கள் கொடுத்து சேர்க்க முடியும். நாமும் சும்மா இருக்காமல் ஏதாவது உருப்படியாக செய்யணும் என்று திட்டமிடும்போது..
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. என் அம்மா அப்பா அவர்களிடம் இருந்த நகை, அப்பாவின் ரிடையர்மெண்ட் சேமிப்பு எல்லாம் கொடுத்து என் கல்யாணத்தை நடத்தினார்கள். நம் பெண்ணுக்கு நகை வேண்டுமென்றால் மொத்தமாக லட்சக் கணக்கில் கொடுத்து வாங்க முடியுமா? இப்போதிலிருந்தே சேமித்தால்தானே, கொஞ்சம் கொஞ்சமாக வாங்க முடியும் என்று கவலைப் பட ஆரம்பிக்கும்போது..
நாம் இருப்பது வெளிநாட்டில். வருடம் ஒரு முறையாவது தாய் நாட்டுக்குப் போக வேண்டும். சும்மா போக முடியுமா – இரண்டு பக்கத்து சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கியாகணும். மிகப் பெரிய தொகை விமான டிக்கட்டுக்கு, அப்புறம் தாய் நாட்டில் கால் டாக்ஸி, ஆட்டோ, செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், விசாரிக்க வேண்டிய கல்யாணங்கள் – இப்படி பணம் தண்ணீராக – இல்லையில்லை – ஆவியாக எவாப்ரேட் ஆகி விடுகிறதே.. கையில் தாராளமாக இருந்தால் மனம் கோணாமல் செலவு செய்யலாம் என்று பெருமூச்சு விடும்போது..
தங்கை கல்யாணம், தம்பியின் படிப்பு, அண்ணன் குழந்தை கைக்கு தங்கக் காப்பு, வெள்ளியில் கொலுசு, அம்மா, அப்பாவுக்கு அவங்களுக்குப் பிடித்த உடைகள் மற்றும் புத்தகங்கள், அவங்களுக்கு கம்ப்ளீட் ஹெல்த் செக்கப் என்று பிறந்த வீட்டிற்கு செய்து, நம் பெற்றோருக்கு நம் நன்றிக் கடனின் ஒரு பகுதியையாவது அடைக்கலாமே! கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் முழு மனதுடன், அன்பாக இதையெல்லாம் அனுமதிக்கிறாங்க.. ஆனால் கணவரின் குடும்பத்திற்கும் இது போல செய்ய வேண்டிய கடமைகள் இருக்கே. அவர் ஒருத்தர் சம்பாத்தியத்தில் முடியுமா, நாமும் சம்பாதித்தால் நல்லதுதானே என்ற எண்ணமிடும்போது..
போதுமான அளவு வருமானம் வந்து கொண்டிருந்தாலும், இந்த மாதிரி சிந்தனைகள் அடிக்கடி தலைகாட்டும் இல்லையா!
இன்னும் கொஞ்சம் சூழ்நிலைகளை பார்ப்போம்.
எந்த மாதிரி நேரங்களில் – அடடா!! இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே.. கொஞ்ச காலத்துக்கு முன்னாலேயே நாமும் சம்பாதிக்கிற வழிகளைப் பார்த்திருக்கலாமே என்று தோன்றும்?
திடீரென்று ரிஸஷன் என்று ஒரு அலை அடித்து, எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடையாது.. வந்து கொண்டிருந்த சம்பளத்திலேயே இத்தனை பெர்ஸண்டேஜ் கட் என்ற நிலையில்..
பல நாட்களாக சொந்த ஊரில், நிலத்தில், வீட்டில் இருந்து – குத்தகைப் பணமாக, வாடகையாக, சாப்பாட்டுக்கு அரிசியாக – இப்படியெல்லாம் வருமானம் வந்துகிட்டிருந்தது. பெரியவங்க இருக்காங்க, மெயிண்டெயின் செய்து நமக்கு பணம் காசு அப்படின்னு அனுப்பிட்டு இருக்காங்க.. அப்படின்னு கொஞ்சம்(!) சொகுசாக இருக்கும்போது – அவங்களால முடியலை, அல்லது பாகப் பிரிவினை.. இப்படி எத்தனையோ சிக்கல்கள் – அல்டிமேட்டாக தெரிவது – இனி அந்த அடிஷனல் வருமானம் கிடையாது என்ற போது..
கையில, பாங்க்ல சேமிப்பு இருக்கு, அவசர ஆத்திரத்துக்கு உதவும், பிள்ளைகள் காலேஜ் படிப்பு, கல்யாணம் இதுக்கெல்லாம் இன்னும் நாள் நட்சத்திரம் இருக்கு, அதுக்குள்ள தேவைப்பட்ட அளவு பணம் சேர்த்து விடலாம் அப்படின்னு கொஞ்சம் அசால்டாக இருக்கும்பொழுது எதிர்பாராமல் மருத்துவ செலவு, ஏதோ ஒரு விதத்தில் வந்து எல்லா சேமிப்பும் அதிலேயே செலவாகி விட்டால் ... இந்த தொகை சேர்க்கவே இவ்வளவு வருடங்கள் ஆனதே, இனி திரும்பவும் சேமிக்க ஆரம்பித்தால் எத்தனை வருடம் ஆகுமோ, போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் ஓ.கே. ஆகுமா என்று திகில் ஆகும்போது..
அருமையான வீடு ஒன்று விலைக்கு வருகிறது. விற்கிறவர் நமக்குத் தெரிந்தவர் – உங்களுக்காக என்றால் இவ்வளவு குறைந்த விலையில் தருகிறேன் என்கிறார். இது மாதிரி ஒரு ஆஃபர் – போனால் வராது.. பொழுது போனால் கிடைக்காது. இப்போ வாங்கிப் போட்டால் சில வருஷங்கள் ஆனதும் சூப்பராக மதிப்பு அதிகமாகும். மாதா மாதம் வாடகையாக வருமானம் வரும் அல்லது இப்போ கொடுக்கிற வாடகை அப்படியே மிச்சம் ஆகும். என்ன செய்ய? கையில் இருக்கும் சேமிப்பு போதாதே.. நாமும் ஏதாவது செய்து, பணம் சேர்த்திருந்தால் இப்போ எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்.... என்று ஆதங்கப்படும்போது
சரி, மேலே சொன்ன மாதிரி எந்த சூழ்நிலையும் கிடையாது. தாராளமாக வருமானம் வருகிறது. சேமிப்புக்கும் சொத்து சுகத்துக்கும் குறைச்சலில்லை என்று இருக்கும் பெண்களாக இருந்தாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும்!
எப்போது??
உங்களுடன் படித்த அல்லது தெரிந்த பெண்கள், பல வருடங்களுக்கு முன் அப்பாவி தங்கமணி, அசட்டு அம்மணி, படிப்பில் சுமார், எப்படித்தான் இது தேறப் போகிறதோ என்று உங்களால் எடை போடப்பட்டவர்கள் - இப்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சுய சம்பாத்தியமும், வெளி உலக அனுபவமும் அவர்களை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி மெருகேற்றி இருக்கின்றன என்று பார்க்கும்போது – முதலில் ஒரு ஆச்சரியம்.. அப்புறம் – இந்தப் பெண்ணே இவ்வளவு முன்னேறி பலரது பாராட்டுக்கும் வியப்புக்கும் ஆளாகி இருக்கும்போது நானெல்லாம் எவ்வளவு சாதித்து இருக்க முடியும்.. இத்தனை நாளாக டைம் வேஸ்ட் பண்ணிட்டேனே என்று பெருமூச்சு விடும்போது..
என்னதான் பெற்றோரும் கணவரும் என்னை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினாலும், எனக்கென்று ஒரு SELF IDENTITY வேண்டும். நான் ஏதாவது செய்தால்தான் என் மீது எனக்கே ஒரு மதிப்பு வரும் என்று தீர்மானிக்கும்போது..
”இரும்பும் சரீரமும் இருந்தால் கெடும்” “சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம்” நாள் பூரா டி.வி.யில் அழுகாச்சி சீரியல்களையும், பழி வாங்கும் புரட்சிகளையும் பார்த்துக் கொண்டு, ஃபோன் பில் கணவரின் அலுவலகத்தில்தானே கட்டுகிறார்கள், அதனால் தினமும் தோழிகள், உறவினர்கள் என்று யாருக்காவது பேசி, ஊர் உலகத்தில் இருக்கிற வம்புகளை கலெக்ட் செய்து, எல்லார் தலையையும் உருட்டிக் கொண்டு – இப்படியெல்லாம் வெட்டிப் பொழுது போக்க என்னால் முடியாது.. உருப்படியாக ஏதாவது செய்தால் வருமானமும் வரும். பொழுதும் நல்லபடியாகப் போகும் என்று முடிவெடுக்கும்போது..
சாதாரணமாகவே நான் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துகிட்டு இருப்பேன். வீட்டில் சும்மாவே இருந்தால் வெயிட்தான் அதிகமாகிறது. ஏதாவது வேலையில் என்னை கமிட் செய்து கொண்டால் மனசு, உடம்பு எல்லாமே நல்லா இருக்கும் என்று யோசிக்கும்போது..
மேலே சொன்னவற்றை படிக்கும்போது – அடேடே, அப்படியே என்னைப் பற்றி, என் மனசில் இருக்கிறதைப் பற்றி எழுதின மாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா, அல்லது கிட்டத்தட்ட இது மாதிரிதான் என்று நினைக்கிறீர்களா?
அப்படியானால் நீங்கள் வேலைக்குப் போவதைப் பற்றியோ, சொந்தமாக தொழில் தொடங்குவதைப் பற்றியோ சிந்திக்க ஆரம்பிக்க இது HIGH TIME.
என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று உடனே, இப்பொழுதே, திட்டமிட ஆரம்பியுங்கள்.
வேலைக்குப் போவதாக இருந்தாலும் சரி, சொந்தமாக பிஸினஸ் செய்வதாக இருந்தாலும் சரி, எத்தனை ஆப்ஷன்ஸ் உங்களுக்குத் தோன்றுகிறதோ, அத்தனையையும் மனதிற்குள் அலசுங்கள். சம்பந்தப்பட்ட விவரங்கள் சேகரியுங்கள். பின் தீர்மானியுங்கள்.
இது எதுவுமே எனக்குப் பொருந்தாது. நன்றாகப் படித்தேன். நல்லபடியாகக் கல்யாணம் ஆகி விட்டது. புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் என் கடமைகளை சரியானபடி செய்துகிட்டு இருக்கேன். குழந்தைகளை என் நேரடி கவனிப்பில் அற்புதமாக வளர்த்து இருக்கிறேன். மனசுக்குப் பிடித்ததை சமைக்கிறேன். எனக்குப் பிடித்த மாதிரி அழகாக உடுத்துகிறேன். வீட்டை பிரமாதமாகப் பராமரிக்கிறேன். நல்ல விஷயங்களைப் படிக்கிறேன், கேட்கிறேன், வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. இன்னும் எனக்கு என்ன வேணும்? வேலைக்குப் போவதற்கோ, பிஸினஸ் என்று ஆரம்பித்து சம்பாதிப்பதற்கோ – இப்படிப்பட்ட தேவையே எனக்குக் கிடையாது என்று நிச்சயமாக சொல்கிறீர்களா!!
வெரி குட்!! நீங்கள்தான் உண்மையிலேயே ஒரு தொழிலதிபராக மலர்வதற்கு முழுவதும் சரியான நபர். சீக்கிரமே செயல்பட ஆரம்பியுங்கள்!
என்ன குழப்பமாக இருக்கிறதா?
வாழ்க்கையில் இது வரை எல்லாமே சரியாக நடந்தது, நடக்கிறது என்றால் அது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல.. எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும்படி டியூன் செய்ததில் உங்களுடைய முக்கிய பங்கு இருந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் SOFT SKILLS என்று சொல்வார்கள்.
மக்கள் தொடர்பு,
பேச்சாற்றல்,
பிரச்னைகளை சமாளித்தல்,
தலைமை தாங்குதல்,
பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல்,
வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளுதல்,
சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தல் போன்றவையெல்லாம் அலுவலகத்துக்கும் பிஸினஸுக்கும் மட்டுமல்ல, குடும்பத்திற்கும் அவசியமானவைதான்.
இந்தத் திறமைகளையெல்லாம் எங்கெங்கு தேவையோ அங்கே எல்லாம் நீங்கள் அழகாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
ஒருவேளை நீங்கள் இவற்றையெல்லாம் அலசி ஆராயாமல் இருந்திருக்கலாம், இது நாள் வரை.
அவசியம் சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ்நிலையின் வற்புறுத்தல் காரணமாக, சாதித்துக் காட்டும் பெண்களைப் போலவே, சம்பாதிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லாத பெண்களாலும் – மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பணியாற்றி, வெற்றி பெற முடியும்.
நீங்கள் வெற்றி பெறுவதால், சாதிப்பதால், உயர்வதால், நேரடியாக உங்கள் குடும்பமும் நீங்களும் பயனடைகிற அதே சமயம் – இன்னும் பல பேரின் முன்னேற்றத்துக்கும் உங்கள் உழைப்பும் சாதனையும் ஒரு மறைமுகமான காரணமாக இருக்கும்.
“என்ன சொல்கிறீர்கள், நான் வேலை செய்வதால், சொந்தத் தொழில் தொடங்குவதால், எனக்கும் என் குடும்பத்துக்கும் நன்மை என்பது ஓ.கே., முதலில் நான் முன்னேறுகிறேனா என்பதைத்தானே பார்க்க வேண்டும். இதில் இன்னும் பல பேரை நான் முன்னுக்குக் கொண்டு வருவதா?”
இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?
வறுமையான நிலையில் உள்ள, படிப்பு மிக மிகக் குறைவான பெண்கள், குடும்பக் கஷ்டம், எதிர்பாராத பிரச்னை என்று வந்தால் சட்டென்று முடிவெடுத்து – குடும்பத்தைத் தாங்குவது தன் பொறுப்பு என்று வேலையில் இறங்கி விடுவார்கள். வீட்டு வேலை, சமையல், காய்கறி விற்பனை, கட்டிடக் கூலி வேலை என்று துணிந்து இறங்கி, உழைப்பார்கள். இவர்களது கண் முன்னே நிற்பது முதலில் வயிற்றுப்பாடு, பிறகே மற்றவை எல்லாம்.
ஓரளவு படித்த, எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுகிற, குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் – தங்களுடைய பொருளாதார பலம், கல்வியறிவு, திறமை இவற்றுக்குத் தகுந்தாற்போல உள்ள வேலைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
டாக்டர், இஞ்சினீயர், பாங்க் வேலை, கல்லூரி ஆசிரியை என்று படிப்புக்கும், உழைப்புக்கும் ஏற்ற கௌரவமான பொசிஷன் கிடைக்கிறது அவர்களுக்கு.
சரி, இதிலெல்லாம் சேராமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை உங்கள் தினசரி வாழ்வில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளி இறுதிப் படிப்பு, டிப்ளமா, பொதுவான டிகிரி என்று படித்திருப்பார்கள். வேலைக்கு செல்வதும் சம்பாதிப்பதும் இவர்களுக்கு மிக மிக முக்கியம். இன்றைக்கு இருக்கிற மார்க்கெட் டிரெண்ட் என்ன, எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும், என்ன சம்பளம் கிடைக்கும் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. யாரையும் கேட்கவும் கூச்சப்படுவார்கள்.
தனக்கு இங்கிலீஷில் பேசத் தெரியவில்லை.. நல்ல உடைகள் இல்லை.. அழகாக இல்லை என்பது போன்ற குறைகள் இவர்கள் முன்னால் மலையாகத் தோன்றி தடுக்கும்.
நேர்மையான எண்ணங்கள், செயல்பாடுகள், பல மணி நேரம் தொடர்ந்து சோர்வில்லாமல் உழைப்பது, இப்படி தங்களிடம் இருக்கும் மிக முக்கியமான பிளஸ் பாயிண்டுகள் அவர்களுக்கே தெரியாது.
மால்களில், சூப்பர் மார்க்கெட்களில், சிறிய நிறுவனங்களில், நர்சரிப் பள்ளிகளில், மிகவும் குறைந்த சம்பளத்திற்கு நேர்மையாக, உண்மையாக நாள் பூராவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பார்கள்.
உங்களைப் போன்ற தலைமைப் பண்பு நிறைந்த பெண்கள், ஒரு நல்ல லாபகரமான தொழிலைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்துவதின் மூலம் இப்படிப்பட்ட பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். அவர்களுக்கு வேலை தர முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
இந்த சமுதாயத்துக்கு உங்களின் சிறந்த பங்களிப்பாக இது இருக்கும்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்..
அன்புடன்
சீதாலஷ்மி


இனி ஒரு பணி செய்வோம் - 7
அன்புத் தோழிகளுக்கு,
சென்ற பகுதி நிறையத் தோழிகளின் கவனத்தைக் கவர்ந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி.
இப்போது நடந்து கொண்டிருக்கும் பட்டி மன்றத்திலும் தோழிகள் வேலைக்கு செல்வது பற்றியும், சுய தொழில் நடத்துவது பற்றியும் சுவையான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். இவை இரண்டிலும் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
சுய தொழில் அல்லது வேலைக்கு செல்வது எதுவானாலும் சரி, வெற்றிகரமாகத் தொடர, நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த வகையில், சில கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். SOFT SKILLS திறன்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?
உண்மையில் இது இங்கே ஒரு பகுதியில் பேசி முடிக்கிற விஷயம் கிடையாது. மிகப் பெரிய கார்ப்பரேட்கள் மட்டுமல்லாமல் வங்கிகள், நிறையப் பேர் வேலை பார்க்கும் நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பிலும் SOFT SKILLS பற்றிய வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பணியாளர்களின் ப்ரொஃபைல், அதற்குத் தேவைப்படும் லெவல் என்று கவனமாக வகுப்புகள் நடத்துகிறார்கள். நிறைய தனியார் நிறுவனங்களும் இந்த டிரெயினிங் தருகிறார்கள். ரோட்டரி கிளப் போன்றவை வருடம் ஒரு முறை மாணவர்களுக்காக RYLA ROTARY YOUTH LEADERSHIP AWARD என்ற பெயரில் லீடர்ஷிப் டிரெயினிங் தருகிறார்கள். இங்கே ஃபிரீலான்சராக வந்து இந்த பயிற்சியைத் தருபவர்கள் இருக்கிறார்கள்.
முதலில் மக்கள் தொடர்பு (INTERPERSONAL SKILLS) பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
நம்மை சுற்றியிருப்பவர்களிடம் நாம் பழகும் முறை நம்முடைய முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலையில் ஆஃபிஸுக்கு வருகிறீர்கள். வாசலில் நிற்கும் செக்யூரிட்டி உங்களுக்கு குட்மார்னிங் சொல்கிறார். அவரிடம் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?
1. பதிலுக்கு குட்மார்னிங் சொல்வது
2. லேசாக தலையை அசைப்பது
3. புன்னகை செய்வது
4. தினமும் பார்க்கிறவர்தானே, அதனால் கண்டு கொள்வதேயில்லை
ஒரு ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் சகாவிடமிருந்து சில விவரங்கள் தேவை. அவர் பிஸியாக இருக்கிறார். நீங்கள் சொல்லி ஒரு வாரம் ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாளில் இதை முடிக்க வேண்டும். அவரிடம் எப்படி கேட்பீர்கள்?
1. எப்போது தருவீர்கள் என்று வற்புறுத்துவீர்கள்
2. திரும்பவும் ஒரு முறை ஞாபகப் படுத்துவீர்கள்
3. மானேஜரிடம் கம்ப்ளெயிண்ட் செய்யப் போவதாக சொல்வீர்கள்
4. நீங்கள் வேலையாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, எனக்கு இந்த FORMATல் இன்னின்ன விவரங்களை மட்டும் கொடுங்கள், போதும், என்று சுமுகமாகப் பேசி, மதியத்துக்குப் பிறகு உட்கார்ந்து முடிக்கலாமா அல்லது நாளைக் காலை வந்ததும் செய்யலாமா என்று கேட்டு, அவரையே பதில் சொல்ல வைத்து, டைம் லிமிட் FIX செய்து, (கிட்டத்தட்ட வற்புறுத்தி), உங்கள் உதவி இருந்ததால்தான் இந்த ரிப்போர்ட் நன்றாக வந்திருக்கிறது என்று பாராட்டி, வேலையை செய்து முடித்து விடுவீர்கள்.
சும்மா உதாரணத்துக்குதான் மேலே கொடுத்திருக்கிறேன். எது சரியான விடை என்று உங்களுக்கே தெரியும் இல்லையா!
COMMUNICATION SKILLS - பேச்சாற்றல்/தொடர்பு கொள்ளுதல் - இது மிகப் பெரிய கடல். நாம் கடற்கரையில் நின்று சற்று பார்க்கலாம், சரியா!
இலா தன்னுடைய பின்னூட்டத்தில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் பயிற்சி பற்றி சொல்லியிருந்ததை படித்தீர்களா? 12 விதமான கம்யூனிகேஷன் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். தோழிகள் ஒரு பேப்பரில் அந்த பனிரெண்டு விதங்கள் என்னென்னவாக இருக்கும் என்று GUESS செய்து எழுதிப் பாருங்கள். சும்மா ஒரு ஊகத்துக்குதான். அதுதான் கரெக்ட் விடையா என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. எத்தனை விதமான ஸ்பீச் நமக்கு நினைவுக்கு வருகிறது என்று பார்க்கலாமே! மேடைப் பேச்சு, காலேஜில் லெக்சரரின் பேச்சு, பிரிவுபசார விழாவில் பேச்சு, - இந்த மாதிரி.
இந்தத் திறமையில் ரொம்ப முக்கியமானது - எதிரில் இருப்பவர்களைப் பேச விட்டு, நாம் கவனிக்க வேண்டும் என்பதுதான். பேசும்போது குறுக்கே பேசாமல் கவனமாக இருப்பது, அவ்வப்போது இடையில், 'ஓ., 'அப்புறம்', - இப்படி அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதேனும் சொல்வது, இதெல்லாம் முக்கியம்.
ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். உதாரணமாக கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள்
OPENING OF THE CALL - உரையாடலைத் தொடங்குவது
EMPATHY - புரிந்து கொள்வது
LISTENING - கவனமாகக் கேட்பது
VOICE MODULATION - பேசுபவரின் குரலின் தன்மை, இயல்பு
SUMMARASING THE CONVERSATION - பேசிய விஷயத்தை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது
CLOSING OF THE CALL - உரையாடலை முடிப்பது
TIME BOUND CONVERSATION - குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிப்பது.
இவற்றில் கவனம் செலுத்துவார்கள்.
இவையெல்லாம் கால் சென்டருக்கு மட்டுமல்ல, அனேகமாக நாம் எல்லா இடத்திலுமே இந்தப் பாயிண்ட்களை நினைவு வைத்துக் கொண்டு பேசலாம்.
பேச ஆரம்பிக்கும்போது, புன்னகையுடன் நலம் விசாரிப்பது, கை கொடுப்பது, கை அசைத்து ஹாய் சொல்வது இது போலத்தான் தொடங்குவோம் இல்லையா.
பேச்சின் இடையே குறுக்கிட்டு, வேறு விஷயத்துக்கு தாவாமல், கவனமாகக் கேட்பது - உதாரணமாக உங்கள் நண்பர் தான் ஊரில் இருந்து வந்தபோது பஸ் பிரேக் டவுன் ஆன கதையை ஆவலாக உங்களிடம் சொல்ல வரும்போது - நீங்கள் உடனேயே உங்கள் சொந்தக் கதை/சோகக் கதையை - நான் கூட போன வருஷம் நார்த் இண்டியா போயிருந்தபோது.. என்று ஆரம்பித்தீர்களானால், நண்பரின் பேசும் ஆர்வம் புஸ்ஸென்று ஆகி விடும், இதே பழக்கத்தை கண்டினியூ செய்தீர்களென்றால் அப்புறம் நீங்கள் பேசுவதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள், தனக்கு தானே பேசிக் கொள்ள வேண்டியதுதான்!
குரலின் தன்மை பற்றி நமக்கு சொல்லியா தரணும்! ஒரு பொருளை பேரம் செய்து வாங்கும்போது, எப்படியெல்லாம் குரல் ஒலிக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். 10 ரூபாயா, என்று கேட்கும்போதே இந்த இரண்டு வார்த்தையில் எத்தனை உள்ளர்த்தத்தை அடக்கி சொல்வீர்கள்! 'இதே பொருளை நான் 7 ரூபாய்க்கு வாங்கினேன் தெரியுமா?, 'ஏன் இந்தப் பேராசை?', 'என்னைப் பார்த்ததும் இப்படி விலை ஏற்றிச் சொல்கிறீர்களா/, - இப்படி எத்தனை அர்த்தம் .. அத்தனையையும் உங்கள் குரலும் அதன் ஏற்ற இறக்கமும் சொல்லி விடாதா.
கம்யூனிகேஷன் ஸ்கில்லைப் பொறுத்தவரை பேசும் வார்த்தைகளுக்கு எத்தனை முக்கியத்துவமோ, அதே போல BODY LANGUAGE என்னும் உடல் அசைவு மொழிக்கும் அர்த்தங்களும் முக்கியத்துவமும் உண்டு. சின்ன உதாரணம், கேட்டுக் கொண்டிருப்பவர் கொட்டாவி விட்டால், பொறுமையின்றி கடிகாரத்தை பார்த்தால் – வேறு என்ன அர்த்தம், 'போரடிக்கிறது, இப்படி வசமாக மாட்டிக் கொண்டேனே' என்பதுதானே.
பேசிக் கொண்ட விஷயத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி, சரி பார்த்துக் கொள்வது -
உங்கள் நண்பர் சென்னையில், நீங்கள் நெல்லையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் நீங்கள் வீட்டில் இல்லாதபோது ஃபோன் செய்கிறார் - தான் கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸில் வருவதாக. உங்கள் வீட்டில் ஃபோனை அட்டெண்ட் செய்து, உங்களுக்குத் தகவல் சொல்கிறார்கள். நீங்களும் சென்னையில் இருந்து வரும் ட்ரெயின் நெல்லை ஸ்டேஷனுக்கு வரும் நேரத்தில் அங்கு போகிறீர்கள். ஆனால் நண்பர் அதில் வரவில்லை. காரணம் அவர் கன்யாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். நீங்கள்தான் அவர் சென்னையிலிருந்து வருவதாக நினைத்துக் கொண்டு விட்டீர்கள். எப்போதுமே நாமாக எதையாவது ஊகித்துக் கொண்டு, FILL UP செய்வதை விட கூடுதலாக இரண்டொரு கேள்விகள் கேட்டு, சரி பார்த்துக் கொள்வது நல்லதுதானே.
விடை பெறும்போது, அடுத்த சந்திப்பைப் பற்றி கன்ஃபர்ம் செய்து கொள்வது, நன்றி சொல்வது, முக்கியமாக வளவளவென்று பேசாமல், சுருக்கமாக, தெளிவாகப் பேசுவது இதெல்லாம் அவசியம்.
பிரச்னைகளை சமாளித்தல்.
தன்னுடைய அப்பாவைப் பற்றி ஒரு பெண் என்னிடம் இப்படி சொன்னார்- 'எங்க அப்பா எப்பவுமே ஒரு பிரச்னை வந்தால் அது ஏன் வந்தது, எப்படி வந்தது என்று அதையே பார்த்துக் கொண்டிருக்க மாட்டார், அதை எப்படி SOLVE செய்வது என்றுதான் யோசிப்பார்' என்று.
இந்தத் திறமைக்கு இதை விட ஒரு சிம்பிளான DEFINITION இருக்குமா என்ன. 'DO NOT LOOK INTO THE PROBLEM. THINK ABOUT THE SOLUTION'. இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் எதையுமே ஏன், எப்படி என்று தெரிந்து கொண்டு தீர்வு கண்டால் திரும்பத் திரும்ப அதே பிரச்னை வராது என்பதுதான் சரி.
LATERAL THINKING பற்றி எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய கதைகளில் அடிக்கடி குறிப்பிட்டிருப்பார். தமிழில் சொன்னால் 'மாத்தி யோசி' - அவ்வளவுதான். அவர் சொன்ன இரண்டு புதிர்களை இங்கே தருகிறேன். ஏற்கனவே அவருடைய வாசகர்களாயிருந்தால் கண்டிப்பாக விடை தெரிந்திருக்கும். மற்ற தோழிகள் யோசித்து பதில் தாருங்கள்.
1. 24 மாடி கட்டிடத்தில் 22வது மாடியில் இருக்கும் ஆஃபிஸின் மானேஜர் அவர். காலையில் லிஃப்டில் போகும்போது, 16வது மாடியில் இறங்கி, பின் படியில் ஏறி, ஆஃபிஸ் போவார். ஆனால் மாலையில் வீடு திரும்பும்போது, 22வது மாடியில் இருந்தே லிஃப்ட்தான். என்ன காரணமாக இருக்க முடியும்?
2. வசந்தினுடைய கார் சாலையின் உயரத்தடை போன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டது. கார் நகரவில்லை. என்ன செய்தால் காரை எடுக்க முடியும்?
ப்ரச்னைகளை சமாளிக்க இப்படி மாத்தி யோசிப்பது அவசியம்.
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்தல்
கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொண்டால், நடக்கும் விஷயங்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் தைரியமும், பக்குவமும் இருந்தால், அடுத்த ஸ்டெப் - நீங்கள் தலைவராவதுதான்.
மானேஜராக இருந்தவர் திடீரென்று வேறு கம்பெனிக்கு சென்று விட்டார். அடுத்தாற்போல இருப்பவரை இன்னொரு கிளைக்கு மாற்றியாகி விட்டது. அதற்கும் அடுத்த இடத்தில் இருந்தவர் ரொம்பவும் சின்ஸியர். அதனால் அவரைக் கூப்பிட்டுப் பேசினார்கள் உயரதிகாரிகள். உங்களை மானேஜர் ஆக்கினால் உங்களால் நல்ல ரிசல்ட் கொடுக்க முடியுமா என்ற சம்பிரதாயக் கேள்வியைக் கேட்டார்கள். இவருக்கோ தனக்கு இவ்வளவு பெரிய எதிர்பாராத வாய்ப்பா என்ற பிரமிப்பு, பரவசம். மானேஜ்மெண்ட் மற்றும் டீம் மெம்பர்கள் எல்லோருடைய ஒத்துழைப்புடன், நிச்சயமாக நல்ல முறையில் செய்வேன் என்று பணிவாக சொன்னார். ஆனால் இந்த பதிலே அவருக்கு எதிராகத் திரும்பி விட்டது. கண்டிப்பாக என்னால் செய்ய முடியும் என்ற தீர்மானமான பதிலை எதிர்பார்த்தவர்களுக்கு, இவருக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறதோ, மற்றவர்களின் கோ-ஆபரேஷன் இல்லையென்றால் இவரால் PERFORMANCE கொடுக்க முடியாதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கி விட்டது இந்த பதில். இங்கே சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளாததால், அந்த வாய்ப்பு வேறொருவருக்கு போய் விட்டது.
எந்த ஒரு வேலையை ஆரம்பித்தாலும், திட்டம் போட்டு, பட்ஜெட் போட்டு, சாதக பாதகங்களை அலசி, அப்புறம்தான் செய்வோம். ஆனால், அதன் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாம் சரியாக நடந்தால், எல்லாம் என்னால்தான், இப்படி இப்படி பிளான் செய்தேன், வழி நடத்தினேன், என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் டோட்டல் ஃப்ளாப் ஆகி விடுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், வரும் புலம்பல்கள், சமாதானங்கள் எப்படி எல்லாம் இருக்கும் தெரியுமா?
'எனக்கென்று ஒரு சொதப்பல் டீம், இவர்களை வைத்துக் கொண்டு நான் என்னதான் செய்வது?', 'நாங்கள் கேட்ட நேரத்தில்/ கேட்ட தொகையை ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட் தந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா?', 'எங்கள் பாஸ் அடிக்கடி தலையிட்டு, அதை மாற்று, இதை மாற்று என்று டிஸ்ட்ராக்ட் செய்ததால் இப்படி ஆகி விட்டது', 'PRECEDENT(முன் மாதிரி) எதுவும் இல்லை, முதல் முறை இந்த மாடலை முயற்சித்தோம்', 'ட்ரெயினிங் கொடுக்காமல், இருக்கிற ரிசோர்ஸ் வைத்துக் கொண்டு செய்யச் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்!'
இன்னும் இதைப் போல் எத்தனையோ காரணங்கள்.. கண்டு பிடித்து சொல்வது கஷ்டமா என்ன!
எப்போதுமே ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் முன்னால், எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் யோசனை கேட்கலாம், தப்பில்லை. ஆனால் அத்தனை யோசனைகளையும் அலசி ஆராய்ந்து, முடிவெடுத்து, காரியத்தில் இறங்குவதற்கு முன்னால், உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டியது இதுதான்.
இந்த முடிவு முழுக்க முழுக்க என்னுடையது. சரியாக வரும் என்ற நம்பிக்கையில் செயல்பட ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை எதுவும் திசை மாறினால், அதற்குண்டான ALTERNATIVE STEPS/SOLUTIONS யோசித்து வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் எதுவும் தவறாக நடந்தாலும், நானேதான் அவற்றை சமாளித்தாக வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்.
இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா, நிறைய பேரிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. தவறு எதுவும் நடந்து விட்டால் - 'அவர் சொன்னதை நம்பி இப்படி செய்து விட்டேன், பேசாமல் நான் முதலில் பிளான் பண்ணியபடி நடத்தியிருந்தால், இப்படியெல்லாம் ஆகியிருக்காது', என்று இந்த மாதிரி பேசுவார்கள். இது ஓரளவு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இப்படி சொல்வதால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க மறுக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். தானே முடிவெடுத்த வேலை என்றால், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்ப்பார்களே தவிர, மற்றவரிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா!
உங்களிடம் உள்ள SOFT SKILLS திறன்களை முதலில் நீங்களே அடையாளம் காணுங்கள். அவற்றை எங்கெல்லாம், எப்படியெல்லாம் சிறப்பாக பயன்படுத்தி, வெற்றி கண்டீர்கள் என்று யோசியுங்கள்.
உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாத் தோழிகளுக்கும் அவை பயன்படும்.
அன்புடன்
சீதாலஷ்மி

இனி ஒரு பணி செய்வோம் - 8
அன்புத் தோழிகளுக்கு வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இது வரைக்கும் நாம் பேசியது எல்லாம் – வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படி? வெளி உலகத் தொடர்பில் நமக்குத் தேவைப்படும் ஸாஃப்ட் ஸ்கில்ஸ் – இவற்றைப் பற்றிப் பேசினோம்.
இதன் தொடர்ச்சியாக, ”ஆட்டிடியூட்” என்பது நமது முன்னேற்றத்தில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் பார்க்கலாமா?
ATTITUDE - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நமது மன நிலை, கருத்து, அணுகுமுறை, - இவை யாவும் - நமது நடத்தை, நடை, உடை, பாவனைகளில் பிரதிபலிக்கும். நம்மைப் பற்றி மற்றவர்கள் எடை போடுவது இதன் அடிப்படையில்தான்.
நமது எண்ணங்களும் கருத்துகளும் பண்பட்டிருந்தால், அவை சிறப்பாக வெளிப்படும். நமது முன்னேற்றத்துக்கும் அது முக்கியக் காரணமாக இருக்கும்.
இதைத்தான் நாம் ATTITUDE என்கிறோம்.
இதை எங்கே கற்றுக் கொள்வது? எப்படி மெருகேற்றிக் கொள்வது?
வெறும் வாசகங்களாகப் பேசுவதை விட, ஒரு EXERCISE ஆக செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
வெறும் EXPERIMENT ஆக சொல்வதை விட, ஒரு சகாவின் REAL TIME EXPERIENCE பகிர்ந்து கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும் அல்லவா!
இதில் இன்னொரு போனஸ்:
உலகம் முழுவதும் கிளைகள் உள்ள ஒரு நிறுவனம் தரும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும், அவர்களது இண்டர்வியூ முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் - அதே சமயம், நம்முடைய ATTITUDE LEVEL பற்றியும், அதை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்வது பற்றியும் கற்றுக் கொள்ள முடியும்!
இந்த நிறுவனத்தில் வயது, மொழி, இனம், மதம், குடியுரிமை, பாலினம், உடல் குறைபாடு, இப்படி எதையும் ஒரு அடிப்படைத் தகுதியாக(BASIC CRITERIA) எடுத்துக் கொள்வதில்லை. இவை எதுவும் தடையாகவும் கருதப்படுவதில்லை.
நாம் மனு செய்யும் வேலைக்குத் தேவையான மற்ற தகுதிகளையும், திறமைகளையும் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள்.
அந்தத் தகுதிகளும் திறமைகளும் நமக்கு இருக்கிறதா என்பதை நாமே அலசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வழிமுறைகளை சொல்கிறார்கள்.
சாதாரணமான பயோடேட்டா, ரெஸ்யூம், அப்ளிகேஷன் போன்றவை கிடையாது.
இண்டர்வியூ எப்படி இருக்கும் என்று விளக்கமாக சொல்லி விடுகிறார்கள்.
இண்டர்வியூவில் என்ன கேட்பார்கள் என்பதையும் முதலிலேயே தெரிந்து கொள்ளலாம்.
அப்ளை செய்து எத்தனை நாட்களுக்குள் இண்டர்வியூ அழைப்பு வரும் என்பதைத் தெரிவிப்பார்கள்.
செலக்ட் ஆனால், நாம் எந்த சம்பள விகிதம் பெறுவோம் என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறார்கள்.
இண்டர்வியூவில் ஒரு வேளை நாம் செலக்ட் ஆகாவிட்டால் ..., அதையும் நமக்குத் தெரிவிப்பார்கள்.
ஏன் நாம் செலக்ட் ஆகவில்லை என்பதையும் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
என்ன நிறுவனம் அது, என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் அங்கே இருக்கின்றன? அவற்றைப் பற்றி நாம் எப்படித் தெரிந்து கொள்வது?
சொல்கிறேன்.
BRITISH COUNCIL பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், உலக நாடுகள் பலவற்றிலும் இவர்களின் கிளைகள், அலுவலகங்கள் இருக்கின்றன.
அலுவலகப் பணி, ஆசிரியப் பணி போன்றவற்றுக்கான வாய்ப்புகளை இவர்கள் தருகிறார்கள். நியூஸ் பேப்பர்களிலும், இவர்களது வெப் சைட்டிலும் வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிடுகிறார்கள்.
வேலைக்கான அப்ளிகேஷனை இவர்களது தளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிரப்ப வேண்டும்.
பெர்ஸனல் தகவல்கள், ரெஃப்ரன்ஸ் போன்றவற்றுடன், அந்த வேலைக்கு நாம் தகுதியானவரா, படிப்பு, அனுபவம் இவற்றுடன் அவர்கள் எதிர் பார்க்கும் லெவல் நம்மிடம் உள்ளதா என்பதை நாமே எடுத்து சொல்லும் விதமாக, ஆதாரபூர்வமாக விளக்கும்படி கேட்கிறார்கள்.
என்ன, கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? சோப் விளம்பரம் மாதிரி ஆதாரம் கேட்கிறீர்களே என்று தோன்றுகிறதா?
உங்களுடைய படிப்புக்கு ஆதாரம் கேட்டால் என்ன செய்வீர்கள்?
உங்களுடைய மார்க் சர்டிஃபிகேட், டிகிரி சர்டிஃபிகேட் போன்றவற்றை எடுத்துக் காட்டுவீர்கள்.
உங்களது ஸ்கில் செட் – உதாரணமாக கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் பற்றி சொல்ல வேண்டுமானால் – ஒரு ப்ரொக்ராம் எழுதிக் காண்பிப்பீர்கள்.
டைப்ரைட்டிங் தெரியுமா, ஆதாரம் உண்டா என்றால், ஒரு பேப்பரில் டைப் அடித்துத் தருவீர்கள்.
இதெல்லாம் சரி, கீழே கேட்கும் கேள்விகளுக்கு, பதில் தரும்போது, என்ன ஆதாரம் தருவீர்கள்? எப்படி தருவீர்கள்?
1. நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?
2. நீங்கள் ஒரு டீம் வொர்க்கரா?(குழுவினருடன்(முரண்படாமல்)சேர்ந்து வேலை செய்யக்கூடியவரா?)
3. எந்த சூழ்நிலையிலும் அனுசரித்து செல்லக் கூடியவரா?
4. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் – உங்களிடம் எந்த அளவு உள்ளது?
5. மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை – இவற்றில் உங்களது திறமை எப்படி?
6. தலைமைப் பண்பு நிறைந்தவரா நீங்கள்?
7. உங்கள் செயல்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டா?
8. எந்த ஒரு விஷயத்தையும் அலசி, ஆராய்ந்து பார்க்க இயலுமா உங்களால்?
9. தன்னம்பிக்கை நிறைந்தவரா?
10. உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்த இயலுமா?
11. உங்களைப் பற்றிய நேர்மையான சுய மதிப்பீடு என்ன?
12. உங்களை சுற்றியிருக்கும் மற்றவர்களை, வழி நடத்துவதுடன், அவர்களை முன்னேற்றவும் உங்களால் முடியுமா?
நீங்கள் வேலைக்கு செல்பவரா, சொந்தத் தொழில் செய்பவரா, இல்லத் தலைவியா, மாணவரா, அரசியல் வாதியா அல்லது “சுக ஜீவனம்” ஆக இருப்பவரா?
இதில் எந்தப் பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும், மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் இருக்கும் உங்களிடம்.
அந்தப் பதிலுக்கு எப்படி ஆதாரம் தருவது, பதில் சரிதானா, இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
அதற்கு முன்னால் -
மற்றதெல்லாம் புரிகிறது, அதென்ன ‘சுக ஜீவனம்’?
தென் மாவட்டங்களில் இந்த வார்த்தை பழக்கத்தில் உண்டு.
முன்னோர்கள் எக்கசக்கமாக சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள், உட்கார்ந்தே செலவு செய்து தீர்க்க முயன்றாலும், வருமானம் என்னவோ ஒரு பக்கம் வந்து கொண்டே இருக்கும், இன்னும் வரும் தலைமுறைகளுக்கும் சொத்து சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி, ”கொடுத்து வைத்த மகராசர்கள்”, - அரசாங்கப் படிவங்களில் ஏதேனும் பூர்த்தி செய்யும்போது, OCCUPATION (தொழில்) என்ற இடத்தில் – ’சுக ஜீவனம்’ என்று குறிப்பிடுவார்களாம்.
வேலை வெட்டி இல்லாமல், உட்கார்ந்தே சாப்பிடுவதற்கு இப்படி ஒரு கௌரவப் பட்டமா என்று கேட்கிறீர்களா?
அதுவும் சரிதான். ஆனால், அந்த நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கும் திறமை வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும், சரிதானே!
சரி, இந்தக் கேள்விகளுக்கு பதிலை நீங்களே தயார் செய்யும் முறையைப் பார்ப்போம்.
கேள்விக்கு பதில் சொல்வதில் கூட ப்ரொஸெஸ், வழிமுறை, கட்டமைப்பு - இருக்கிறது. அதை முதலில் தெரிந்து கொண்டால், நமது பதிலும் தெளிவாக இருக்கும்.
உங்களுடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில் சொல்லுங்கள்.
உங்களுடைய படிப்பு, திறமை, அனுபவம் இவற்றை நீங்கள் எப்படி பயன்படுத்தினீர்கள் அல்லது இவை உங்களுக்கு உதவிகரமாக இருந்ததா என்று சொல்லுங்கள்.
உங்கள் பதில்களின் கட்டமைப்பு(STRUCTURE) எப்படி இருக்க வேண்டும்?
STAR
S = SITUATION சூழ்நிலை. இரண்டொரு வரிகளில் இதை விளக்கினால் போதுமானது.
T = TASK/TARGET உங்கள் முன் இருக்கும் சவால், நோக்கம், வேலை.... இதையும் சுருக்கமாக, தெளிவாக சொல்ல வேண்டும்.
A = ACTION நீங்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கை.
R = RESULT/OUTCOME இதன் வெற்றி/தோல்வி, விடை....
இந்த முறையில் உங்களுடைய பதில்களை நீங்கள் தர வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலில் தேர்வுப் பணிகளை கவனிக்கும் பொறுப்பாளர்(PRE TEST EXECUTIVE/POST TEST EXECUTIVE) வேலைக்கு அப்ளை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த்ப் பணிக்கு உங்களிடம் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகள்/திறமைகளையும் அதன் லெவல்களையும் தெளிவாக சொல்லி விடுவார்கள்.
இந்த வேலைக்கு ACHIEVEMENT,
TEAM WORKING,
FLEXIBILITY,
COMMUNICATION SKILLS,
MARKETING AND CUSTOMER SERVICE,
COMPUTING SKILLS
இவையெல்லாம் அவர்களுடைய தர நிர்ணயப்படி லெவல் 1 பூர்த்தி செய்யும் அளவு இருக்க வேண்டும்.
தொடர்வதற்கு முன், மீண்டும் ஒரு விளக்கம் –
இந்தப் பகுதியில் நாம் பேசுவது எல்லாம் ஒரு அறிமுக நிலை மட்டுமே. INTERACTIVE SESSION ஆக, நேரடியாகப் பேசும்போது, நிறைய விளக்கங்கள், கேட்கவும் சொல்லவும் முடியும். எழுத்து வடிவத்தில் நான் இங்கே தருவதால், அடிப்படையான விஷயங்களை மட்டுமே சுவாரசியம் குறையாமல் சொல்ல முடியும். உங்களுக்கும் அதில் ஆர்வம் உண்டாகும். சரியா!!!
முதலில் ACHIEVEMENT = LEVEL 1
இதில் அவர்கள் லெவல் 1 என்று குறிப்பிடுவது –
உங்கள் பணியில், உங்களிடம் எதிர்பார்க்கப் படுவது என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
பணியைப் பற்றிய உற்சாகமான, நேர்மறையான சிந்தனைகள் இருக்க வேண்டும்.
தடைகளைக் கண்டு சோர்ந்து விடக் கூடாது.
முக்கியமாக, நமது வேலையை சரியாக செய்யும் அதே நேரத்தில், மற்றவர்களின் உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
சரி தோழிகளே, அதிகமான கவனத்துடன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த முறை கொடுத்திருக்கிறேன். அதனால் இந்தப் பகுதியை இரண்டு அல்லது மூன்று முறையாவது படித்துப் பாருங்கள்.
அடுத்த பகுதியில் மற்ற தகுதிகளுக்கான விளக்கங்கள், அதற்கு பதில்கள் எப்படி சொல்வது, என்பதைப் பார்க்கலாம்.
அன்புடன்
சீதாலஷ்மி

இனி ஒரு பணி செய்வோம் - 9
சென்ற பகுதியைப் படித்துப் பார்த்தீர்களா? ஆர்வமுள்ள தோழிகள் நிச்சயம் ஒரு படி மேலே போய், ப்ரிட்டிஷ் கவுன்சிலின் வெப்சைட்டையும் பார்த்திருப்பீர்கள்தானே!
சரி, சென்ற பகுதியில் என்ன பேசினோம் என்று ஒரு ரீ-கேப் –
ஆட்டிடியூட் என்றால் என்ன?
ப்ரிட்டிஷ் கவுன்ஸிலின் வேலை வாய்ப்புகள், அவை பற்றிய விவரங்கள் எங்கே கிடைக்கும்?
அவர்களது இண்டர்வியூவுக்கு தயார் செய்வதோடு, நம்முடைய BEHAVIORAL COMPETENCYயை நாமே அறிந்து கொள்வது.
வேலைக்கான அப்ளிகேஷன் ஃபார்ம் எப்படி நிரப்ப வேண்டும்?
அவர்கள் எதிர்பார்க்கும் திறமைகள், அதற்கான உதாரணம்..
திறமைகள் மற்றும் லெவல்கள், லெவல் 1ல் என்ன இருக்க வேண்டும்?
இவைதானே!!
சரி, மேலே பேசுவோமா?
சென்ற பகுதியில் குறிப்பிட்ட உதாரணத்துக்கே திரும்பவும் வருகிறேன்.
ACHIEVEMENT – Level 1
இதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகளையும், அவை உங்களிடம் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் வழிமுறையாக
S T A R என்ற ப்ரொஸெஸ் பற்றி சொல்லியிருந்தேன்.
திரும்பவும் விளக்குகிறேன்:
(I) வேலைக்கான தகுதிகள் – தலைப்புகளாகவும்,
(II) அவற்றின் லெவலுக்குத் தகுந்தாற்போல் அதில் உள்ள சில அம்சங்கள் – உட்பிரிவுகளாகவும் (படிகளாகவும்),
(III) அவை உங்களிடம் இருக்கின்றனவா என்பதை நீங்கள் ஆதாரத்துடன் (உங்கள் அனுபவங்களின் வாயிலாக) பதிலாகவும்
(IV) அந்த பதிலின் ஸ்ட்ரக்சர் - சிச்சுவேஷன் S, டார்கெட்/டாஸ்க் T, ஆக்‌ஷன் A, ரிசல்ட் R, S T A R என்று அமைய வேண்டும்.
ACHIVEMENT - லெவல் 1ல் என்ன இருக்க வேண்டும்?
1. பணியில், உங்களிடம் எதிர்பார்க்கப் படுவது என்ன என்ற தெளிவான புரிதல்.
2. பணியைப் பற்றிய உற்சாகமான, நேர்மறையான சிந்தனைகள்.
3. தடைகளைக் கண்டு சோர்ந்து விடக் கூடாது.
4. முக்கியமாக, நமது வேலையை சரியாக செய்யும் அதே நேரத்தில், மற்றவர்களின் உரிமைக்கு மதிப்பு கொடுத்தல்.
இவையெல்லாம் உங்களிடம் இருக்கிறன்றன என்று உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி, நீங்கள் விளக்கலாம். அது உங்கள் முந்தைய பணியிலோ, கல்லூரி வாழ்க்கையிலோ, அல்லது சொந்த வாழ்க்கையில் நடந்ததாகவோ இருக்கலாம்.
உதாரணங்கள் பார்ப்போம்:
முந்தைய வேலையில், வருடக் கடைசிக்கான அக்கவுண்ட்ஸ் முடித்தது
காலேஜில், கல்சுரல் ப்ரோக்ராமில் நீங்கள் பொறுப்பேற்று, நடத்திய டான்ஸ் நிகழ்ச்சி.
ப்ளஸ் டூ முடித்த பின், மேலே என்ன படிப்பது, எங்கே படிப்பது என்பதை முடிவு செய்து, வெற்றிகரமாக டிகிரி வாங்கியது.
முதல் உதாரணத்தை, ACHIEVEMENT LEVEL 1 – இதை விளக்குவதற்கு எடுத்துக் கொள்வோம்
ஃபைனல் அக்கவுண்ட்ஸ், எப்படி முடிக்கணும், எந்த தேதிக்குள் முடிக்கணும், யாரிடம் வெரிஃபை செய்து கொள்ளணும், எங்கே சப்மிட் செய்யணும் – இது முதல் அம்சம்.
என்னால முடியும், இன்னும் இத்தனை நாள் டயம் இருக்கு, அதற்குள் தாராளமாய் செய்து விடுவேன் என்ற உற்சாகம் – இது இரண்டாவது அம்சம்.
தேடிய லெட்ஜர்கள் கிடைக்கலை, மற்ற ரெஜிடர்கள் அப்டேட் செய்யப்படலை, உதவிக்கு இருந்தவர் திடீரென்று லீவு – சமாளிக்க முடியணும் – இது மூன்றாவது அம்சம்.
நம்முடைய வேலையை முடிக்கணும் என்பதற்காக, மற்றவர்களின் வேலையில் தொந்தரவு கொடுக்க முடியாது. கடைசி நேர நெருக்கடி கொடுப்பது, அவர்களை கோபிப்பது, சரியான ட்ரெயினிங் கொடுக்காமல் இருப்பது – இப்படியெல்லாம் செய்ய முடியாது. நன்றாக வேலை செய்தால் அவர்களைப் பாராட்டணும், அதற்குண்டான அடிஷனல் பெனிஃபிட்(ஓவர் டைம், ஃபுட் அலவன்ஸ், இந்த மாதிரி) அவர்களுக்குக் கிடைக்க செய்யணும் – இது நாலாவது அம்சம்.
இந்த நிகழ்வை, ஏற்கனவே சொன்ன S T A R முறையில் எழுதிப் பாருங்கள்.
இருக்கும் ரிஸோர்ஸை வைத்துக் கொண்டு, வருடாந்திர கணக்கு முடித்தல் – இதுதான் சிச்சுவேஷன்.
சொன்ன தேதியில், குழப்பம் எதுவும் இல்லாமல், அந்த இலாகாவிடமிருந்து QUERY எதுவும் வராமல், முடித்துக் கொடுத்து, சபாஷ் வாங்கணும் – இது டாஸ்க்/டார்கெட்.
வருட முழுவதும் உள்ள ரெஜிஸ்டர்கள், லெட்ஜர் போஸ்டிங் எல்லாம் க்ராஸ் செக் செய்து, உதவியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கி, ஆர்கனைஸ்ட் ஆகப் பார்த்தது – இது உங்களுடைய ஆக்‌ஷன்.
சரியான முறையில் எல்லாம் நடந்தது எப்படி – இது நீங்க கொடுத்த ரிசல்ட்.
முக்கியமான ஒன்று – இதை நீங்க இங்கிலீஷில், 200 வார்த்தைகளுக்குள் எழுதணும். இது ஒன்றும் சிரமமில்லை. உங்க கம்ப்யூட்டர் நீங்க எழுதியதில் எத்தனை வார்த்தைகள் இருக்கு என்று சொல்லி விடும்.
சரி, அடுத்த தகுதி – டீம் வொர்க்கிங். லெவல் 1
இதில் அவர்கள் எதிர் பார்ப்பது -
1. முழு விருப்பத்துடன் ஒத்துழைப்பது.
2. மற்றவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.
3. டீம் மெம்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது, அதிக முயற்சி எடுத்து, அவர்களுக்கு உதவுவது.
4. மற்ற டிபார்ட்மெண்ட்களிலிருந்து தேவைப்படும் உதவிகளைப் பெற வழிகள் கண்டுபிடிப்பது.
5. நிறுவனங்களும், குழுக்களும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைப் புரிந்து நடப்பது.
இதில் உங்கள் தகுதி, லெவலை விளக்க, இரண்டாம் உதாரணமான – காலேஜ் டான்ஸ் ப்ரோகிராமை நீங்கள் எடுத்து நடத்தியதை சொல்லலாம்.
டீமின் மற்ற மெம்பர்களுடன், ஒத்திகை, டிரஸ் வாங்குவது, இதற்கெல்லாம் முழு விருப்பத்துடன் ஒத்துழைப்பது – முதல் அம்சம்.
பாடல்கள், கோரியோக்ராஃபி இவற்றில் மற்றவர்கள் யோசனை சொன்னால், டிஸ்கஸ் செய்து, OPEN MINDED ஆக ஏற்றுக் கொள்வது – இரண்டாவது அம்சம்.
குழுவினரில் சில பேருக்கு, சில ஸ்டெப்ஸ் வரவில்லை, கூடுதல் நேரம் எடுத்து, ஒத்திகை செய்யணும், ஒரே நேரத்தில் வர முடியலை, தனிப் பட்ட நேரம் தேவைப்படுது என்றால், முகம் சுளிக்காமல், கூடுதல் முயற்சியுடன் உதவி செய்யணும் – மூன்றாவது அம்சம்.
நீங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட், நன்றாக ஆடக்கூடிய உங்கள் பள்ளித் தோழி – வேறு டிபார்ட்மெண்ட், அவளையும் உங்கள் குழுவில் சேர்க்கணும் என்றால், 2 H O D களிடமும் பெர்மிஷன் வாங்கணும். இரண்டு பேருக்கும் COLD WAR என்றால், என்ன செய்வது? யார் சொன்னால், இரண்டு பேரும் கேட்பார்களோ, அவங்க மூலமாக மூவ் செய்து, பெர்மிஷன் வாங்கணும் – இது நான்காவது அம்சம்.
நீங்க யு.ஜி. படித்த காலேஜில், குத்துப் பாட்டு, ஓரியண்டல் டான்ஸ் என்று அமர்க்களப்படுத்தியிருக்கலாம். அதே வகை டான்ஸ் செலக்ட் செய்வதற்கு முன்னால், நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் விசாரித்துக் கொள்வது அவசியம். இங்கே கிளாசிகல் டான்ஸ் மட்டும்தான் அனுமதி, என்றால், அதன் காரணம், இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மதிப்பீடுகள் வேறு என்பதைப் புரிந்திருக்க வேண்டும் – இது ஐந்தாவது அம்சம்.
இதை இப்போது ஸ்டார் S T A R முறையில் எழுதுவோமா?
கல்சுரல் ப்ரோகிராமில் டான்ஸ் நிகழ்ச்சி, உங்கள் பொறுப்பில் – இது சிச்சுவேஷன். S
எந்த வகை நடனம், ஆடுபவர்கள் யார், எப்போது, எப்படி, ப்ராக்டிஸ் செய்வது, என்ன மாடலில் ட்ரஸ் வாங்குவது, எல்லாம் முடிவு செய்து, எல்லோரது ஒத்துழைப்புடன், சிறப்பாக நடத்துவது – இது டார்கெட்/டாஸ்க். T
நடன வகை, பாடல்கள் செலக்ட் செய்தது, தினமும் எல்லோருக்கும் சௌகரியமான நேரத்தில் ஒத்திகை பார்த்தது, நடன அசைவுகளை மெருகேற்றியது, எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்றது – நிகழ்ச்சி அன்று சரியான முறையில் ப்ரசெண்ட் செய்தது – இது ஆக்‌ஷன். A
எல்லோரிடமும் தி பெஸ்ட் ப்ரோகிராம் என்று பெயர் வாங்கியது – இது ரிசல்ட். R
சரி, அடுத்த தகுதியாக அவர்கள் எதிர்பார்ப்பது :
FLEXIBILITY.
இதில் அவர்கள் LEVEL 1ல் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்னென்ன?
முதலில் அவர்கள் சொல்வது - FLEXIBILITY எனும் அனுசரித்துப் போகும் தன்மைக்கு அவசியம் இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது “ACCEPTING THE NEED FOR FLEXIBILITY”.
இதில் அவர்கள் எதிர் பார்க்கும் அம்சங்கள் ரொம்ப சிம்பிள்.
புதுமையான ஆதாரபூர்வமான, தெளிவான விஷயங்கள் தெரிய வரும்போது, இதுவரை இருந்த உங்களுடைய (முற்றிலும் மாறுபட்ட) எண்ணங்களையும் ஐடியாக்களையும் மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.
புதிய சிந்தனைகளை வரவேற்கவும், அடுத்தவர்கள் சொல்வதை, அவர்களது பார்வையிலிருந்து புரிந்து கொள்ளவும், கவனம் செலுத்தவும், திறந்த மனத்துடன் கேட்கவும், தயாராக இருக்க வேண்டும்.
இது நம்ம வீடுகளில் பெரியவங்க சொல்வதுதான். “நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்” என்று சொல்லாதே. அவ்வளவேதான்.
டீம் வொர்க்கும் ஃப்ளெக்ஸிபிலிடியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோன்றினாலும், முக்கியமான வித்தியாசம் – டீம் ஆக வேலை பார்ப்பது என்பது குழுவினருடன் வேலை பார்ப்பது. ஃப்ளெக்ஸிபிலிடி என்பது நீங்கள் தனி ஆளாகப் பணியாற்றினாலும் தேவைப்படும் ஒன்று., சரிதானே.
சரி, இந்தத் தகுதி, தன்னிடம் இருப்பதை, தான் டிகிரி வாங்கியது எப்படி என்பதை சொல்லி, விளக்கலாம்.
ப்ளஸ் டூ படிக்கும்போது, இந்த தோழியின் எண்ணம் எல்லாம், இஞ்சினீயரிங் படிக்கணும், நிறைய மார்க் எடுக்கணும் என்பதுதான். ஆனால், சோதனையாக, பரீட்சை சமயத்தில், உடல் நிலை காரணமாக, மார்க் குறைந்து விட்டது. இம்ப்ரூவ்மெண்ட் எழுதினால், நிச்சயம் கூடுதலாக மார்க் எடுத்து, தகுதி பெற முடியும். பலரிடமும் யோசனை கேட்டார். அதில் ஒருவர், “ஒரு வருடம் வெயிட் செய்து, இம்ப்ரூவ்மெண்ட் எழுதி, மார்க் வாங்கி, அடுத்த வருடம் அதிகப் போட்டிக்கிடையில் தடுமாறுவதை விட, இப்போது இளநிலை பி.எஸ்சி – கம்ப்யூட்டர் சயன்ஸ் எடுத்துப் படி, பிறகு எம்.சி.ஏ படிக்கலாம். இதுவும் ப்ரொஃபஷனல் டிகிரிதானே, என்றார். தோழிக்கு இது பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்து, அதன்படியே இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தார்.
இது அவர் மற்றவர்கள் சொல்வதை, கவனமாகக் கேட்டு, ஆராய்ந்து, தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டதால்தானே சாத்தியமாயிற்று.
காலையில் 9 மணிக்கு, ஆஃபிஸுக்கு, கிளம்பிப் போய், சாயங்காலம் 6 மணிக்கு வீடு திரும்பும் ரொடீன் இப்போது ஐ.டி.அலுவலகங்களில் கிடையாது. இன்றைய இளைஞர்கள் வாங்கும் சம்பள விகிதம், சென்ற தலைமுறையினரை ஆச்சரியப் பட வைக்கிறது. அதே சமயம், இளைஞர்கள் தங்களை ஃப்ளெக்ஸிபிள் ஆக மாற்றிக் கொண்டார்கள், என்பது ஒரு முக்கிய காரணம் அல்லவா. இதையும் விட இன்னும் ஆச்சரியப் பட வைக்கும் விஷய்ம், வங்கிகளில், லெட்ஜர்களிலும், ரெஜிஸ்தர்களிலும், பக்கம் பக்கமாக எண்ட்ரிகள் போட்டு, எழுதி, வேலை செய்து வந்த, மத்திய வயதினர், கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு, கலக்குகிறார்களே, இதுவும் கூட, காலத்துடன் அனுசரித்துப் போவதுதானே.
அடுத்து, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் – இதில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பார்ப்போம்.
ஏற்கனவே, ஒரு பகுதியில், கம்யூனிகேஷன் என்பது ஒரு பெரிய கடல் என்று சொல்லியிருந்தேன். அதில் லெவல் 1 என்பது என்ன, என்பது தெளிவாகக் குறிப்பிடப் படும்போது, நம்மை நாமே எடை போட்டுப் பார்த்துக் கொள்வது கொஞ்சம் சுலபமாகத்தான் தெரிகிறது.
COMMUNICATION SKILLS
Reading and Writing Skills
எழுதுவதில், படிப்பதில், திறமை.
நமக்குத் தெரிந்த மொழிகளில், பேசுவதோடு, இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் இல்லாமல், எழுதத் தெரிய வேண்டும். படிப்பவர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும். அதற்கு, நமக்கு அந்த மொழிகளில் நல்ல ஆளுமை இருக்க வேண்டும்.
Speaking and Listening Skills
பேச்சுத் திறன், கவனிக்கும் திறன்
பேச்சுத் திறன் என்பது, சொல்ல வந்ததை, தெளிவாகவும், சுவாரசியமாகவும், அதே சமயம், கஸ்டமர் அதை ஒப்புக் கொள்ளும் விதமாகவும் பேச வேண்டும். அத்துடன், கஸ்டமர் சொல்வதை, கவனமாகக் கேட்க வேண்டும். இங்கே கஸ்டமர் என்று சொல்வது நம்மிடம் உள்ள பொருள், சர்வீஸ், இவற்றை பணம் கொடுத்துப் பெறுபவர்களை, EXTERNAL CUSTOMERS என்று சொல்கிறோம். அலுவலகத்தில், நம்முடன் பணியாற்றும் – மேலதிகாரிகள், சகாக்கள், நமக்குக் கீழே பணிபுரிபவர்கள் எல்லோருமே நமக்கு கஸ்டமர்கள்தான். இவர்களை INTERNAL CUSTOMERS என்று சொல்வோம்.
Understanding Purpose
தெளிவாகப் புரிந்து கொள்வதன் அவசியம்.
பேசுவதைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு நாங்கள் சின்னக் குழந்தையா என்று கேட்கத் தோன்றும்.
பேசப்படும் எல்லா வார்த்தைகளிலும் SURFACE LEVEL MEANING, DEEPER LEVEL MEANING, என்று இருக்கின்றன. “இந்த வேலையை உங்களால் மட்டும்தான் சிறப்பாக செய்ய முடிகிறது”, என்று சொல்லும்போது, அது ஒரு சமயம் மனமார்ந்த பாராட்டு. இன்னொரு சமயம், இதைத் தவிர, வேறொன்றும் செய்யத் தெரியாதா? என்ற கேள்வி அதில் இருக்கலாம்.
READ BETWEEN THE LINES என்று சொல்வார்கள். மேலே சொன்ன பாராட்டு மொழியில், ’இதே இடத்தில்தான் நீங்க இருக்கணும், ப்ரமோஷன் எதுவும் எதிர்பார்க்காதீங்க’ என்ற செய்தி கூட ஒளிந்திருக்கலாம்.
Understanding the audience
யாரிடம், பேசுகிறோம், எங்கே பேசுகிறோம், என்பதை கவனத்தில் கொண்டு, அவ்ர்களின் தேவையைப் புரிந்து கொள்வது. அதிலிருந்து நமக்குத் தேவையான விஷயங்களை கிரகித்துக் கொண்டு, சிறப்பான சர்வீஸ் தருவது.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒரு டாக்டரின் அனுபவம் இது:
நோயாளியின் கேஸ் ஹிஸ்டரியை விசாரிக்கும்போது, “ இது மாதிரி உங்களுக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறதா?” என்று கேட்கும்போது, அவர் டீடெயிலாக சொல்கிறார் – எப்படி? “ ஆமா, டாக்டர், 2-3 வருஷத்துக்கு மின்னே, எங்க அம்மா ரொம்ப சீரியசாக இருந்தப்ப வந்தது. அப்ப, உள்ளூர்லேயே வைத்தியம் பாத்துகிட்டேன், அப்புறம், போன வருஷம் போல, ஊரில வெள்ளம் வந்தப்பவும் இப்படி ஆச்சு. இப்ப நாலஞ்சு மாசத்துக்கு முன்னால, மச்சினன் கல்யாணத்துக்குப் போயிருந்த இடத்திலயும் முடியாம வந்துச்சு.”
இதில் டாக்டருக்கு கிடைக்கும் தகவல்கள் – ஏற்கனவே மூன்று முறை உடல் நலக் குறைவு இருந்திருக்கிறது என்பது மட்டுமே. என்ன வைத்தியம் செய்து கொண்டார், அதன் தாக்கம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் அவர் பொறுமையாகத்தான் கேட்க வேண்டும். “உங்க அம்மாவுக்கு முடியாம வந்ததும், வெள்ளம் வந்த கதையும், மச்சினன் கல்யாண தேதியும் எனக்கு எப்படித் தெரியும்?” என்று கோபப் பட முடியாது.
இது ரொம்பவும் நுணுக்கமான ஒன்று. உங்களிடம் பேசுபவர்கள், எந்த விதமான அடையாளத்தையும் காட்டாமல் இருக்கலாம். அல்லது, அவர்களது நிஜ நோக்கத்தை மறைத்துப் பேசலாம்.
நாம் என்ன பேச வேண்டுமோ, அதில் தெளிவாக இருந்து, இயல்பாகப் பேசினால், எந்தப் பிரச்னையும் வராது அல்லவா?
சில வருடங்களுக்கு முன், ஒரு வெற்றி விழா நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். உயர்பதவியில் இருக்கும் ஒருவர், எழுத்தாளர், பேச்சாளரும் கூட. அந்த விழாவில் பேச, தகுதி படைத்தவர்தான்.
ஆனால், அவர் சரியாகத் தயார் செய்து கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். வெற்றி விழாவில், சம்பந்தப் பட்டவர்களை, வாழ்த்திப் பேசுவதற்கு பதிலாக, பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள், என்று சம்பந்தமில்லாத நெகடிவ் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளார்கள் நெளிய ஆரம்பித்து விட்டார்கள். கடைசியில் அவர் பேச்சை அரைகுறையாக முடித்தார். எந்த இடத்தில், எதைப் பேச வேண்டும் என்பதை அவர் மறந்து விட்டார்தானே.
Understanding tools and media
தொடர்பு சாதனங்களையும் ஊடகங்களையும் கையாளத் தெரிந்திருப்பது
ஒரு பெரிய உலகளாவிய நிறுவனத்தில், நவீன தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இருக்கும். இவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சிலவற்றைப் பற்றி, தெரியவில்லை என்றாலும், ட்ரெயினிங் கொடுத்தால், புரிந்து கொள்ளும் திறன் வேண்டும்.
டெலக்ஸ், ஃபாக்ஸ், OHP PRESENTATION, நவீன ஃபோன்கள், இண்டர்காம் சாதனங்கள், நவீன ரக கம்ப்யூட்டர்கள், ட்விட்டர் - இப்படிப் பல.
பத்திரிக்கைகள், டி.வி, இவற்றுக்கு கொடுக்கப் படும் விளம்பரங்களுக்கும், ப்ரஸ் நோட் எனப்படும் தகவலுக்கும் உள்ள வித்தியாசம் – என்று இவையெல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தால், சுவாரசியத்துக்கு அளவேது!
Knowledge Sharing
நமக்குத் தெரிந்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.
சிலரைப் பார்த்திருப்பீர்கள் – என் வேலையை நானே பார்த்தால்தான் எனக்கு திருப்தி என்பார்கள். மற்றவர்களிடம் வேலையைக் கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்னொன்று, இதைக் கற்றுக் கொண்டு, நம்மை ஓவர்டேக் செய்து விட்டால் என்ன செய்வது, என்ற பயத்திலேயே, பெரும்பாலானவர்கள், தனக்குத் தெரிந்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
என்ன ஆகும் தெரியுமா? இவங்க தனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டு, அந்த இடத்திலேயே, தேங்கி இருப்பார்கள். மற்றவர்கள், முன்னேறிப் போய் விட்டதை, ரொம்ப லேட் ஆகத்தான் உணர்வார்கள்.
நம்முடைய வேலையை, தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை பல டாஸ்க் ஆக பிரித்து, யாரால் எந்த வேலையை நன்றாக செய்ய முடியும் என்று தெரிந்து, அவர்களிடம் அவற்றை ஒப்படைத்து, வேலை வாங்குவது மிகச் சிறந்த ஒன்று. இதை செய்வதற்கு, வேலையை ஒப்படைப்பது மட்டுமல்ல, அந்த வேலையின் தொடர்பான விஷயங்களையும் ஓரளவுக்கேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நான் இவ்வளவு பெரிதாக சொல்ல வந்ததை, திருவள்ளுவர் இரண்டே வரிகளில் “இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” அழகாக சொல்லி இருக்கிறார்.
COMPUTING SKILLS
கம்ப்யூட்டரைக் கையாளத் தெரிந்திருப்பது
Outlook, Word, Excel, PowerPoint, etc. இவை எல்லாவற்றையும் பற்றிய பிராக்டிகல் அறிவு.
உதாரணமாக, ஏதேனும் கம்பாரிஸன் ஸ்டேட்மெண்ட் ( சென்ற ஐந்து வருட லாபக் கணக்குகள்)தயாரிக்க வேண்டியிருந்தால், பொருத்தமாக, தலைப்புகள் தந்து, சீராக டைப் செய்வது, எக்ஸெலில் ஃபார்முலாக்கள் இணைக்கத் தெரிவது – இவை போன்றவை, புதிய ப்ரொடெக்ட் அறிமுகத்தை பவர் பாயிண்டில் ப்ரசெண்ட் செய்யத் தெரிவது. லேட்டஸ்ட் கம்ப்யூட்டர்களைக் கையாளத் தெரிந்திருப்பது, இப்படி எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலே சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை தேடுவதற்கென்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டியவைதானே. இவற்றில் நாம் எந்த விஷயங்களில் நம்மை டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, அந்த இடைவெளியை நிரப்பி, அவற்றை மேம்படுத்திக் கொண்டால், எப்போதும் வெற்றி நமதே!


இனி ஒரு பணி செய்வோம் - 10
அன்புத் தோழிகளுக்கு வணக்கம்.
இந்தப் பகுதியில் நான் பேசப் போவது மிகவும் சுவாரசியமான, ஒரு பகுதி நேர வேலையைப் பற்றி. புகழ், பிரபலம், பணம் என்று எல்லாம் தரும் வேலை இது.
கிட்டத்தட்ட சரியாக ஊகித்திருப்பீங்க என்று. நினைக்கிறேன். இது சின்னத் திரையில் தோன்றும் வாய்ப்பைப் பற்றி.
சின்னத் திரை என்றால் சீரியல்களில் நடிப்பது அல்ல, விளம்பரங்களில் தோன்றும் மாடலிங் பற்றிதான் சொல்லப் போகிறேன்.
விளம்பரங்களை ”30 வினாடி அதிசயம்” என்று சொல்வார்கள். ஆமாம், பல கோடிகள் செலவு செய்து, எடுக்கப்பட்டு, இரண்டரை மணி நேரம் ஓடும் முழு நீள திரைப்படங்களை விட, சில பல லட்சங்கள் செலவில், அரை நிமிடமே ஓடும் இந்த விளம்பரப் படங்கள், சின்னத் திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி, பெரியவங்க முதல் குழந்தைகள் வரை எல்லார் மனசிலும் இடம் பிடித்து விடுகிறதே.
குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போதே, ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரப் பாடல்களைத்தானே கற்றுக் கொள்கிறார்கள்! செல்ஃபோன் விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டியை ரசிக்காதவங்க யார்? கடைக்குப் புடவை எடுக்கப் போனால், விளம்பர மாடல் கட்டியிருந்த புடவையைத்தான் தேடிப் பார்க்க தோணுது, இல்லையா.
ஒரு திரைப்படத்துக்கு தேவைப்படும் அத்தனை உழைப்பும், விளம்பரப் படத்துக்கும் தேவைப்படும். சொல்ல வரும் விஷயத்தை, 30 வினாடியில், பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். பல நூறு முறை, எல்லா சானலிலும், திரும்ப, திரும்ப ஒளிபரப்பப் பட்டாலும், பார்க்கும்போது சலிப்பு தோன்றக் கூடாது, ரிமோட்டைத் தேடி, சானலை மாற்றத் தோன்றாமல், ஆர்வத்துடன் பார்க்கும்படி இருக்கணும்.
விளம்பரப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள், என்பதைப் பற்றி, அதன் சுவாரசியத்தைப் பற்றி, ஒரு புத்தகமே எழுதலாம். ஆனால், நாம் இங்கே தெரிந்து கொள்ளப் போவது, விளம்பரங்களில் தோன்றும் மாடலாக முடியுமா, அதற்கு என்ன செய்ய வேண்டும், வருமானம் எப்படி? இதெல்லாம்தான்.
மாடல் ஆகணும்னா, ரொம்ப அழகாக இருக்கணுமா? பாட்டு, டான்ஸ் தெரியணுமா? எத்தனை வயது வரைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்? பல கேள்விகள் ...
80 வயது தாத்தா பாட்டியிலிருந்து, 30 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை வரை விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். இவர்களெல்லாம், சினிமாவிலோ, சீரியலிலோ வர்றதில்லையே, ஒரு வேளை, விளம்பரங்கள் எடுப்பவங்களுக்கு சொந்தக்காரங்களாக இருப்பாங்க, இப்படியெல்லாம், உங்களுக்குத் தோன்றியிருக்கும். நம்ம வீட்டுக் குட்டிகள், அதே மாதிரி, நடித்துக் காட்டும்போது, அட, நாம கூட திரையில் வரலாமேன்னு தோன்றியிருக்கும்.
உங்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால், இந்தப் பகுதி உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
விளம்பரப்படங்கள் எடுத்துக் கொடுப்பதற்காக, நிறைய ஏஜென்சிகள் இருக்கின்றன. சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் டைரக்டர்கள் இருக்கிறார்கள். சினிமாவைப் போலவே, இதிலும், தயாரிப்பு, டைரக்‌ஷன், கதை, வசனம், பாடல்கள், இசை, டான்ஸ், நடிகர்கள், எல்லாம் உண்டு.
இந்த நடிகர், நடிகைகளைத்தான் நாம் மாடல்கள் என்று சொல்கிறோம்.
மற்ற விஷயங்களை முடிவு செய்த பின், தேவைப்படும் மாடல்களைப் பற்றி, தீர்மானிப்பார்கள்.
உதாரணமாக, ஒரு குடும்பமாக திரையில் வர வேண்டும் என்றால், எந்த எந்த வயதில் கதாபாத்திரங்கள் தேவை என்பதைப் பார்ப்பார்கள்.
பிறகு மாடலிங் கோ ஆர்டினேட்டர்களை அணுகுவார்கள். இவர்களிடம் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, தேர்வு செய்து கொள்வார்கள். ஒரு கதாபாத்திரத்துக்கு, நான்கைந்து பேரை வரவழைத்து, ஃபோட்டோ, வீடியோ ஷூட் செய்து, பின், ஒருத்தரை மட்டும் தேர்வு செய்வதும் உண்டு.
தேர்வு செய்யப்பட்டவர்களை, தகவல் சொல்லி வரவழைத்து, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா, நடித்தார்களா, என்பதை உறுதி செய்து கொண்டு, மாடல்களுக்கான சம்பளப் பணத்தையும், விளம்பர கம்பெனியிலிருந்து பெற்றுத் தருவது மாடல் கோ ஆர்டினேட்டர்கள்தான். ஆமாம், மாடல்களுக்கும், விளம்பர கம்பெனிகளுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. இவர்களுக்கிடையில் பாலமாக செயல்படுவது, மாடலிங் கோ ஆர்டினேட்டர்கள்தான்.
அதாவது, கோ ஆர்டினேட்டரிடம் புகைப்படம் இருந்தால், அவர் மூலமாக சான்ஸ் கிடைக்கும், அதானே, உடனே, அந்த கோ ஆர்டினேட்டர் அட்ரஸ் கொடுங்க, என்னோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ பர்ஸில் இருக்கு, கொடுத்து விட்டு வர்றேன், என்று கேட்கிறீர்களா?
அவசரப்படாதீர்கள். ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
உங்கள் புகைப்படத்தை மாட்லிங் கோ ஆர்டினேட்டரிடம் கொடுப்பதற்கு முன்னால், நீங்கள் போர்ட்ஃபோலியோ எனப்படும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
போர்ட்ஃபோலியோ என்றால் என்ன? யார் எடுப்பார்கள் இதை? எவ்வளவு செலவாகும்?
சென்னை, மும்பை போன்ற நகரங்களில், இந்த வகை ஃபோட்டோக்கள் எடுப்பதற்காகவே, தனிப்பட்ட ஸ்பெஷல் ஃபோட்டோகிராஃபர்கள் இருக்கிறார்கள். பல வசதிகளுடன் கூடிய, ஃபோட்டோ ஸ்டுடியோவும் வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை, முதலில் அணுக வேண்டும். எந்தத் தேதியில் எடுக்க வேண்டும், என்னென்ன காஸ்ட்யூமில் எடுக்க வேண்டும் என்று பேசி டிசைட் செய்து கொள்ளுங்கள்.
ஆறு அல்லது ஏழு காஸ்ட்யூம்கள் வரை, உபயோகிக்கலாம். ஆண்களாக இருந்தால், கோட் சூட், பைஜாமா ஜிப்பா, பாண்ட் ஷர்ட், ஜீன்ஸ் டி ஷர்ட், வேஷ்டி சட்டை, ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் என்று எடுக்கலாம்.
இளம்பெண்களும் இதே போல, பட்டுப் புடவை, சுடிதார், ஜீன்ஸ் என்று பல காஸ்ட்யூம்களில் எடுக்கலாம். ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு - உங்கள் கற்பனைத் திறனைப் பொறுத்து, பல விதமான உடைகளில் எடுக்கலாம்.
வயதானவர்களுமே, முடிந்தவரை, மூன்று அல்லது நான்கு விதங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். நம் விருப்பத்தைப் பொறுத்தது இது.
அனேகமாக ஃபோட்டோகிராஃபரே, மேக்கப் மேனையும் புக் செய்து விடுவார். இதற்கும் சேர்த்துதான் சார்ஜ் செய்வார்கள்.
மேக்கப் எதுக்கு, நாமே ஃபவுண்டேஷன் கிரீம், பௌடர், என்று அழகாக செய்து கொள்ளலாமே என்ற கேள்வி எழுகிறதா. நீங்கள் செய்து கொள்ளும் மேக்கப், இந்த வகை புகைப்படங்களில் ப்ரைட்டாக இருப்பது சாத்தியமில்லை. மேக்கப் சாதனங்களின் உதவியுடன், அதற்கென்று பயிற்சி பெற்ற மேக்கப் மேன் ஒப்பனை செய்து விடும்போது, புகைப்படங்களில் நீங்கள் அசத்தலாக தோற்றமளிக்க முடியும்.
பெண்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட், புடவை கட்டி விடும் அஸிஸ்டெண்ட் பெண், தேவைப்பட்டால், அதையும் மேக்கப் மேன் உடன் வர வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விடலாம்.
சிறப்பான லைட்டிங்கில், சின்ன சின்ன ஆனால் வித்தியாசமான முக பாவங்களை காட்டச் சொல்லி, மிகவும் ப்ரொஃபஷனலாக புகைப் படங்கள் எடுப்பார்கள்.
இந்த ஃபோட்டொ செஷனுக்கு, மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும்.
மறு நாளோ, அல்லது ஓரிரு நாட்களிலோ, இரண்டு செட் புகைப்படங்கள், அவை காப்பி செய்யப்பட்ட சி.டி.யும் உங்களிடம் தந்து விடுவார்கள். நீங்கள் தேவைப்படும்போது, அருகாமையில் உள்ள எந்த ஸ்டுடியோவிலும் அதிக ப்ரிண்டுகள் போட்டுக் கொள்ள, இந்த சி.டி.வசதியாக இருக்கும். உங்கள் சிஸ்டத்திலும் காப்பி செய்து வைத்துக் கொண்டால், மெயிலில் அனுப்பவும் முடியும்.
எவ்வளவு செலவாகும்?
குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஆகும். இது எனக்குத் தெரிந்து லேட்டஸ்ட் நிலவரம்.
இவ்வளவா? என்கிறீர்களா. இந்த செலவு சென்னையில் எடுத்தால்தான். மும்பை என்றால் இன்னும் பந்தாவாக, இன்னும் பல ஆயிரங்கள் ஆகலாம்.
இவ்வளவு செலவு செய்து ஃபோட்டோக்கள் எடுத்தால், அந்த அளவுக்கு வருமானம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?
அதற்கு பிறகு வருவோம். புகைப்படங்கள் எடுத்த பின்னர், அடுத்த ஸ்டெப் என்ன என்று பார்ப்போம்.
ஏற்கனவே சொன்னது மாதிரி, உஙக்ள் புகைப்படங்களை, மாடல் கோ ஆர்டினேட்டர்களிடம் கொடுக்க வேண்டியதுதான் அடுத்த வேலை.
சென்னையில், நீண்ட நாட்களாக, இந்தத் துறையில், மாடல் கோ ஆர்டினேட்டர்களாக, வெற்றிகரமாக சாதித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் – திருமதி பிஜ்ஜு ஜெயதேவ், திருமதி தாரா உமேஷ், திருமதி ருக்மணி, திருமதி லஷ்மி சிவகுமார், திரு மனோஜ் கிருஷ்ணா. ஆம், பெண்கள் மிக சிறப்பாகவே இந்தத் துறையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இவர்களை காண்டாக்ட் செய்யுங்கள். நேரில் சென்று புகைப்படங்களைக் கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு, மெயிலிலும், உங்கள் புகைப் படங்களை அனுப்பலாம்.
அதற்குப் பிறகு?
அதற்குப் பிறகு, சான்ஸ் கிடைப்பது எப்போது என்பதை தீர்மானிப்பது நீங்களோ, கோ ஆர்டினேட்டரோ கிடையாது. மாடலிங் ஏஜென்ஸியை அணுகும் விளமபரப் பட டைரக்டர், உங்கள் புகைப்படத்தைப் பார்த்து, உங்களை தேர்வு செய்தால், நீங்கள் மாடல் ஆகி விடுவீர்கள்.
உதாரணத்துக்கு, சாக்லேட் விளம்பரத்துக்காக, எட்டு வயது சிறுவன் தேவைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். விளம்பர ஏஜென்ஸி இதைத் தெரிவித்ததும், கோ ஆர்டினேட்டர், தான் வகைப் படுத்தி வைத்திருக்கும் புகைப்படங்களிலிருந்து, இந்த வயது சிறுவர்கள் அனைவரது ஃபோட்டோக்களையும் காட்டுவார். டைரக்டர் யாரை செலக்ட் செய்கிறாரோ, அவருக்கு சான்ஸ் கிடைக்கும்.
இது போல, நீங்கள் செலக்ட் செய்யப்பட்டால், கோ ஆர்டினேட்டர், உங்களுக்கு ஃபோன் செய்து, நீங்கள் நடிக்கத் தயாரா, அந்தத் தேதிகளில் ஊரில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வார். பிறகு, ஷீட்டிங் நடைபெறும் இடம், தேதி, யாரை அங்கு தொடர்பு கொள்ளணும், என்று, எல்லாத் தகவல்களும் உஙகளிடம் சொல்லி விடுவார்.
நீங்கள் அந்த இடத்துக்கு சென்று, ஷீட்டிங்கில் டைரக்டர் சொன்ன மாதிரி, சரியாக நடித்து விட்டால், சக்ஸஸ்தான்.
இதுதான் மிகக் கஷ்டமான ஒரு விஷயம். ஏற்கனவே சொன்னது போல, திரையில் விளம்பரம் வருவதென்னவோ, ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம்தான். ஆனால், மிகப் பொருத்தமாக, டைரக்டர் எதிர்பார்க்கும் பெர்ஃபார்மன்ஸ் தருவது என்பது, உங்களிடம்தான் இருக்கிறது.
ஒரு நிமிடம் திரையில் வருவதற்கு, எவ்வளவு நேரம், படம் பிடித்து விடப் போகிறார்கள் என்று தோன்றலாம். ஒரு நாள் முழுவதும் படப் பிடிப்பு நடைபெறும். சில சமயம் அதற்கு மேலும் நடைபெறலாம். வீடியோ ஷீட்டிங்குடன், ஃபோட்டோ செஷனும் நடைபெறும். பத்திரிக்கைகளில் விளம்பரங்களில் வெளியிட வேண்டும் அல்லவா.
நீங்கள் நடித்ததற்கான சம்பளத்தை, உங்கள் கோ ஆர்டினேட்டரிடம் தந்து விடுவார்கள். அவர்கள் தங்களுக்குரிய சர்வீஸ் சார்ஜ் எனப்படும் தொகையை எடுத்துக் கொண்டு, மீதியை உங்களுக்குத் தருவார்கள். சாதாரணமாக 10% முதல் 15% வரை கோ ஆர்டினேட்டர்கள் சார்ஜ் செய்வார்கள்.
நீங்கள் நடித்த விளம்பரத்தில், நல்ல பெயர் கிடைத்தால், தொடர்ந்து வாய்ப்புகள் வரும். சின்னத்திரை, வெள்ளித் திரை வாய்ப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இன்றைய நட்சத்திரங்கள் பலரும் மாடல் ஆகத்தான் தங்கள் எண்ட்ரியைத் துவக்கியிருக்கிறார்கள்.
எனக்கு அதெல்லாம் வேண்டாம், சினிமா, சீரியல் இதெல்லாம் எனக்கு இஷ்டமே கிடையாது. விளம்பரங்களிலும், எல்லாவற்றிலும் என்னால் தோன்ற முடியாது. எனக்குப் பிடித்த விளம்பரங்களில் மட்டும் நான் நடிக்க முடியுமா? என்று ஒரு கேள்வியை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
பதிலையும் நானே சொல்கிறேன். தாராளமாக நீங்கள் உங்கள் கருத்தை முதலிலேயே கோஆர்டினேட்டர்களிடம் சொல்லி விடுங்கள். அதே போல, நீங்கள் செலக்ட் செய்யப் படும்போது, என்ன விளம்பரம், உங்கள் காஸ்ட்யூம் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு ஒப்புக் கொள்ளுங்கள். முதலிலேயே சொல்லாமல், ஷீட்டிங் ஆரம்பித்த பின் சொல்வது என்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
சரி, எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
இது உங்களை வைத்து படம் எடுக்கும் ஏஜென்ஸியையும், நீங்கள் தோன்றும் பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் பொறுத்தது. அவர்களின் பட்ஜெட், தாராளமாக இருந்தால், உங்கள் வருமானமும் அதிகமே. குறைந்தபட்சம் ஒரு விளம்பரப் பட ஷீட்டிங்குக்கு ஐந்தாயிரம் முதல் எதிர்பார்க்கலாம். இது உத்தேசமான தொகைதான். பெரிய கம்பெனிகள் என்றால், கூடுதலாகவே கிடைக்கும்.
இந்தத் துறையில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போமா?
இந்தப் பகுதியை எழுதுவதையே நான் ரொம்ப ரொம்ப யோசித்துதான் எழுதுகிறேன். காரணம், மிக எளிதில் ஏமாற்றப்படவும், கண்ணியக் குறைவாக மதிப்பிடப்பட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், நல்ல வருமானம், பிரபலம், புகழ் இவற்றின் காரணமாக இந்தத் துறை அதீதமாக கவர்ந்திழுக்கவும் செய்யும்.
போர்ட்ஃபோலியோ எடுக்கும்போதே, நன்றாக விசாரித்துத் தெரிந்து கொண்டு, நல்லதொரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபரிடம்தான் புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.
கோ ஆர்டினேட்டர் என்ற பெயரில் நிறைய போலிகள் உண்டு. ஜாக்கிரதை, ஜாக்கிரதை, ஜாக்கிரதை.
நான் மேலே குறிப்பிட்டிருக்கும் கோ ஆர்டினேட்டர்கள், ஃபோட்டோக்களைப் பெற்றுக் கொள்ள, உங்களிடம் எதுவும் பணம் கேட்க மாட்டார்கள். ஃபோட்டோக்களை அவர்களிடம் தரும்போது, அவற்றின் பின்னால், உங்கள் பெயர், தொலைபேசி எண், செல்ஃபோன் எண், இவற்றை, தெளிவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் பெயரை ரிஜிஸ்தர் செய்து கொள்வது போன்ற அவசியம் எதுவும் இல்லை. உங்கள் புகைப்படஙகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள். நீங்கள் செலக்ட் செய்யப்பட்டு, வேலை பார்த்தால், சம்பளம் உங்களுக்கு. குறிப்பிட்ட சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் அவர்களுக்கு. அவ்வளவுதான்.
எங்களிடம் பணம் கொடுத்து, பதிவு செய்து கொள்ளுங்கள் என்று யாராவது சொன்னால், யோசித்து செயல்படுங்கள். அது வேண்டாம் என்றே சொல்வேன்.
திரும்பவும் சொல்கிறேன். கவனமாக செயல்பட்டால், நல்ல வருமானமும், புகழும் கண்டிப்பாகக் கிடைக்கும். அதே சமயம், எந்த வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாமல், ஜாக்கிரதையான உள்ளுணர்வுடன் இந்தத் துறையில் இறங்குங்கள். இது முழுக்க, முழுக்க, உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
இதில் நான் ஒரு முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லவேயில்லையே, கவனித்தீர்களா?
இந்த மாடலிங் ப்ரொஃபஷன் சென்னையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஏனென்றால், இரண்டு தினங்களில் ஷீட்டிங், அல்லது நாளை காலையில் ஷீட்டிங் என்றால், சென்னையில் இருக்கும் மாடல்கள்தான் வந்து நடிக்க முடியும்.
சரி, தோழிகளே, இந்தத் தகவல்களுடன் நான் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.
கடந்த எட்டு மாதங்களாக, இந்தப் பகுதி மூலம், உங்களிடம் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்திருக்கிறது.
நான் பல முறை சொன்னது போல, நான்தான் உங்கள் எல்லோரிடமும் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அன்பான பின்னூட்டங்கள் தந்து, என்னை உற்சாகப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த, மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படியெல்லாம் பல விஷயங்கள் எழுத முடியும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. என் மேல் நம்பிக்கை வைத்து, வாய்ப்பு தந்து, என்னை எழுத வைத்த, நமது மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனதில் இருக்கும் நிறைவையும், மகிழ்ச்சியையும், நன்றியையும், அழகாகச் சொல்ல, எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
அன்புத் தோழி வனிதாவின் வைர வரிகளை, கடனாகப் பெற்று, இங்கே பதித்து, மனம் நெகிழ்கிறேன்.
அறுசுவை... ஒரு அரிய சுவை !!!
சில தினங்கள் காணாமல் இருக்க திட்டங்கள் தீட்டினாலும் தோற்றுத்தான் போகிறேன். என்ன செய்து என்னை இங்கு சிறை பிடித்தாய்??
உன்னுடன் கூடிய நட்புக்கு வயது இரண்டு தான்... ஆனால் ஈரேழு ஜென்ம பந்தம் போல் உணர்கிறேன்.
தனிமையில் அமர்ந்து உன்னிடம் பேசாத போதெல்லாம் சுற்றி பலர் இருந்தும் தனிமையை உணர்ந்த மாயம் என்ன?!
எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்.
வீடுவிட்டு, நாடுவிட்டு தனிமையில் வாடியபோதெல்லாம் தோழிகள் பல தந்து மனதில் நிம்மதி தந்த உனக்கு நான் தர... என் எழுத்தும், நன்றியும் மட்டுமே
”எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்”
”அறுசுவைக்கு நான் தர ... என் எழுத்தும், நன்றியும் மட்டுமே”
இந்த வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன!!!
நன்றி அட்மின், நன்றி தோழிகளே!
இப்போதைக்கு, இந்தப் பகுதியிலிருந்து விடை பெறுகிறேன்.
மீண்டும் அறுசுவையின் அற்புத சுவையுடன் கூடிய மற்ற பகுதிகளில் சந்திப்போம்.
வணக்கம்.

1 comment:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz