குகூள் நிறுவனத்தின் யூ டியூப் சேவை தனது அடுத்த பாய்ச்சலுக்காக, கல்வியை தேர்வு செய்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிறுவங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சேனல்கள் யூ டியூப்பில் அறிமுகமாகியுள்ளன.
யூ டியூப் எஜுக்கேஷன் (You Tube Education):
இச்சேனல் மூலம் மாணவர்கள் புத்தகத்தைப் படித்து, பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. தேவையான தலைப்பை You Tube Education-ல் டைப் செய்து முழு விவரங்களுடன் பாடத்தைப் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவைப் பார்த்தால் போதும். வெகு எளிதாகப் புரிந்துவிடும்.
உதாரணமாக, உயிரியலில் உணவு செரிமானம் முறை (Digestive System) பற்றிய பாடத்தைப் பற்றி படித்திருக்கிறோம். நாம் தினமும் சாப்பிடும் உணவு எப்படி ஜீரணமாகிறது என்பதைப் பற்றி விளக்கும் பாடம் அது. வயிற்றுக்குள் நடப்பவற்றை வெறும் புத்தகத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா? அதையே You Tube Education சேனலில் உணவு செரிமானம் முறையை விளக்கும் அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதைப் பார்க்கும்போது மாணவர்களுக்கு சுலபமாக புரிந்துவிடும். மேலும் யூ டியூப் கல்வியில் ஆரம்ப மற்றும் மேல்நிலைக்கல்வி (Primary & Secondary Education), வாழ்நாள் கற்றல் (Lifelong Learning), பல்கலைக்கழகம் (University) என மூன்று பிரிவுகள் உள்ளன. ஆரம்ப மற்றும் மேல்நிலைக்கல்வியில் மொழிகள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வரலாறு என ஐந்து பாடங்களில் வீடியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாழ்நாள் கல்வியில், சாதனையாளர்களின் வரலாறுகளை அனிமேஷன் அல்லது படங்கள் மூலம் வீடியோக்களாக வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் பிரிவில் கலைகள், வணிகவியல், கல்வி, பொறியியல், சட்டம், மருத்துவம், அறிவியல் என பல துறைகள் தொடர்பான வீடியோக்கள் உள்ளன.
இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் இச்சேனலைப் பார்க்கும் போது எந்தக் கருத்துரையும், Related Videos என்று எதுவும் வராது. வேறு ஏதேனும் தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதன் மூலம் மாணவர்களின் கவனம் சிதறவும் வாய்ப்பில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, யூ டியூப் கல்வி ஒரு வரப்பிரசாதம்தான்.
இணையதள முகவரி: www.youtube.com/education
யூ டியூப் டீச்சர்ஸ் (You Tube Teachers):
புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு வகுப்பறைகளில் பாடம் நடத்த வேண்டும் என்று ஆசைப்படும் ஆசிரியர்களா நீங்கள்? You Tube Teachers தளத்திற்குச் சென்று, தங்களுக்குத் தேவையான பாடத்தின் தலைப்பை தட்டச்சு செய்து, மற்ற ஆசிரியர்கள் அந்தப் பாடத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக ஆங்கிலப் பாடத்தில் Idioms and Phrases பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், You tube Teacher-ல் Idioms and Phrases என டைப் செய்து Search கொடுக்க வேண்டும்.
இப்போது Idioms and Phrases பற்றி வெளிநாட்டுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திய வீடியோக்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் சுலபமாகப் புரிந்துகொள்வதற்கான வழிகளும் அந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாடம் நடத்திய வீடியோக்கள் ஏராளாமாக உள்ளன. அவற்றைப் பார்த்து ஆசிரியர்கள், தங்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இணையதள முகவரி: www.youtube.com/teachers
யூ டியூப் ஸ்கூல்ஸ் (You Tube Schools):
You Tube Schools சேனலைப் பயன்படுத்த பள்ளி நிறுவனங்கள் தங்கள் பள்ளிக்கான கூகுள் கணக்கொன்றை (Google Accounts) உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பள்ளிகள் தங்கள் வகுப்புகளில் நடத்தப்படும் பாடம் தொடர்பான வீடியோக்களை தரவேற்றிக் கொள்ளலாம்.
ஏற்கனவே யூ டியூப் கல்வியில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்வி சார்ந்த வீடியோக்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு போட்டுக் காண்பிக்கலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். இந்தச் சேனலை மாணவர்கள் பயன்படுத்த இயலாது.
இணையதள முகவரி: www.youtube.com/schools
இந்த சேனல்களுக்கு சேவைக் கட்டணம் எதுவும் கிடையாது. இணையத்தில் நல்ல விஷயங்களோடு இரண்டறக் கலந்துவிட்ட கெட்ட விஷயங்களைக் கழித்துவிட்டு ஆக்கப்பூர்வமானவற்றை மட்டும் காட்சிப்படுத்தும் யூ டியூப்பின் இந்தச் சேவையை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment