மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி
உடல்பருமனுக்கு மட்டுமல்ல, மன
உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கும் நடைப்பயிற்சி தான் சரியான தீர்வு
என்று சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை வருவதற்கான காரணங்கள், அவற்றை
தவிர்க்கும் வழிகள் குறித்து இங்கிலாந்தின் எக்சிடர் பல்கலை மற்றும் ஸ்காட்லாந்தின்
ஸ்டிர்லிங் பல்கலைகழகம் இணைந்து பேராசிரியர் அட்ரியன் டெய்லர் தலைமையில் சமீபத்தில்
ஆய்வு நடத்தின.
மன உளைச்சல் பாதிப்பில் இருந்த 341 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
அவர்கள் நிறைய நடக்குமாறு கூறப்பட்டது. இதில் அவர்களது மன அழுத்தம், மன இறுக்கம்
ஆகியவை கணிசமாக குறைந்திருந்தது.
ஆய்வு பற்றி அட்ரியன் மேலும் கூறியதாவது: சராசரியாக பத்தில் ஒருவர் தனது
வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்.
உடற்பயிற்சி, மனதை அடக்கும் யோகா, தியானம் போன்றவற்றால் மன கோளாறுகளை கட்டுப்படுத்த
முடியும்.
அதே நேரம் கடுமையான உடற்பயிற்சி மூலமாக கிடைக்கும் பலன், நடைபயிற்சி மூலமாகவே
கிடைத்து விடுகிறது. இது செலவு இல்லாத, அதிகம் சிரமம் இல்லாத பயிற்சி.
எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வெளியில் நடக்க வேண்டுமா,
வீட்டுக்குள் நடக்கலாமா? என்ற சந்தேகங்களை தீர்க்க தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய
வேண்டியது அவசியம். ஆனாலும் முடிந்தவரை நடப்பது நல்லது என்று அட்ரியன் கூறினார்.
இங்கிலாந்தை சேர்ந்த மைண்ட் அறக்கட்டளை நிறுவனம் மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை
நடத்தி வருகிறது. அதன் நிர்வாகி பால் பார்மர் கூறும் போது, வெளியிடங்களில் அதிக
நேரம் செலவிட்டால், மன அழுத்தம் குறையும்.
உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி ஒன்றை தெரிவு செய்து, அதை திறந்த வெளியில் செய்வது
நல்ல பலனை தரும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது, நீச்சல்
அடிப்பது ஆகியவற்றைக்கூட தேர்ந்தெடுக்கலாம். பலருடன் சேர்ந்து உடற்பயிற்சியில்
ஈடுபடும் போது சமூக இணைப்பு பலமாகிறது. பிரச்னைகள், குறைகளை மனம் விட்டு பேச
வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
No comments:
Post a Comment