Monday 9 September 2013

வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை.


வத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட
 ஊரான தேவதானப்பட்டி வழியாகவும்,  தேனி-பெரியகுளம்
 வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். 
இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் 
பூண்டின் மணம் காற்றுவெளிகளில் கலந்து
 வாசத்தை அள்ளி வீசுகிறது. வடுகபட்டியின்
 பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை.
 இந்த ஊருக்கு பூண்டு சந்தை வந்தது எப்படி?
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 
இரண்டு தலைமுறைக்கு முன்பு வடுகபட்டிக்கு 
அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில்
 விளைந்த பூண்டுகளை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு
 கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை,
 அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, '
பண்டமாற்றுமுறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி
 மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும்
 அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
இன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும்
 இந்த சந்தைக்கு  மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்,
 இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி,
 கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும்
 ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து 
வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல்
 பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது. 
 தேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மலைப்
 பூண்டிற்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் இதற்கு எப்போதுமே
 மவுசு என்கிறார்கள் இங்குள்ள வியாபாரிகள். பொதுவாகவே
 வெள்ளைப்பூண்டு வாயுத் தொல்லைகளை கட்டுப்படுத்தும் 
குணம் கொண்டது என்றாலும், மலைப்பகுதியில் விளையும் 
பூண்டிற்கு வாயு, பிரஷர், பிரசவ கால வைத்தியத்தில் முக்கிய 
இடம் பிடிக்கிறது என்பதால் மலைப்பூண்டு அதிக அளவில்
 விற்பனையாகிறது.
வடுகபட்டி ஒரு கிராமம்தான் என்றாலும், தமிழகத்தின் அனைத்து
 பெரிய நகரங்களுக்கும் இங்கிருந்துதான் வெள்ளைப்பூண்டு
 செல்கிறது. வாரத்தில் ஞாயிறு, வியாழன் என்று இரண்டு நாட்கள் 
வடுகபட்டி பூண்டு சந்தை நடைபெறும். உள்ளூர் வியாபாரிகள் தவிர, வெளியூர்களில் இருந்தும் பல வியாபாரிகள் வந்து, கிலோ கணக்கிலும் மூட்டைகளாகவும் பூண்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம். வாரத்தின்
 இந்த இரு நாட்களிலும் பல ஆயிரம் டன் பூண்டு வியாபாரம் ஆகிவிடுகிறது.  
மொத்த வியாபாரிகள் மட்டுமல்ல, ஐம்பது கிலோ, இருபது, முப்பது கிலோ என்கிற வகையில் தலைச்சுமை வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளின் கூட்டமும் வடுகபட்டியில் கூடிவிடுகிறது. குஜராத், ராஜஸ்தான், 
மத்தியபிரதேச மாநிலங்களில் விளையும் பூண்டு வகைகள் இங்கு 
ஒரு கிலோ 7 ரூபாய் முதல்
21 ரூபாய் வரையிலும், ஊட்டி, கொடைக்கானல் மலைப்பூண்டு 
கிலோ ஒன்றுக்கு 10 முதல் 60 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. இங்கிருந்து பூண்டு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளியூரில்
 நல்ல விலை வைத்து லாபம் பார்க்கிறார்கள். மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.  
எல்லா ஊர்களிலும் வெள்ளை பூண்டு கிடைத்துவிடும்தான்; ஆனால், வடுகபட்டியில் தரமான பூண்டு, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். திண்டுக்கல், தேனி, பழனி, வைகை அணை என சுற்றுலாச்
 செல்பவர்கள் சிரமம் பார்க்காமல் வடுகபட்டிக்கும் பயணப்பட்டால்
 மருத்துவ குணம்கொண்ட மலைப்பூண்டுகளையும் வெள்ளைப்பூண்டுகளையும் பை நிறைய வாங்கி வரலாம் என்பதை இனி மறக்கவே வேண்டாம்.
- சண்.சரவணகுமார்,

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz